எடப்பாடியார் 'சீட்' தருவதாக சொன்னார்.. நான் வேண்டாமுன்னு சொல்லிட்டேன்.. நவரச நாயகன் சொல்றத பாருங்க!
மதுரை: முதல்வர் பழனிசாமி தேர்தலில் போட்டியிட எனக்கு சீட் தருகிறேன் எனக் கூறினார். ஆனால் பிரச்சாரத்துக்கு மட்டும் வருகிறேன் என்று தான் கூறிவிட்டதாக நடிகர் கார்த்திக் கூறினார்.
எனக்கு எந்தவிதத் தேவையும் இல்லை. ஆனால், நலிவடைந்த, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு கிடைத்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
பிரச்சாரத்துக்குச் செல்வதற்கு முன் சிலர் தன்னை மிரட்டி பார்ப்பதாகவும் கார்த்திக் தெரிவித்தார்.

உடல்நலக்குறைவு
நடிகரும், மனித உரிமைகள் காக்கும் கட்சியின் தலைவருமான கார்த்திக் சட்டமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணிக்கு ஆதரவு கொடுத்தார். பாஜக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் குஷ்புக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன் என்றும் அறிவித்திருந்தார். இதற்கான தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது கார்த்திக்கு திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனயாக அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அனைவருக்கும் இட ஒதுக்கீடு
பின்னர் தீவிர சிகிச்சை பெற்ற கார்த்திக் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்த நிலையில் மதுரை மதுரை விமான நிலையத்தில் கார்த்திக் நிருபர்களிடம் கூறியதாவது:- அனைத்து சமூகத்திலும் சாதி அடிப்படை இன்றி பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கினால் நல்லது.

மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்
நடிகர்கள் சாதி, மதம் இனம் என பாகுபாடு இன்றி பொதுவானவர்கள். நானும் சாதிக்காக இல்லாவிட்டாலும் அனைத்து சமுதாய மக்களுக்காகவும் குரல் கொடுத்து வருகிறேன். எனது மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று முதல்வருடன் கூறினேன். நான் வசதியாக உள்ளதால் எனக்கு எந்தவிதத் தேவையும் இல்லை. ஆனால், நலிவடைந்த, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும்.

தேர்தல் சீட் தருகிறேன் என்றார்
முதல்வர் பழனிசாமி தேர்தலில் போட்டியிட எனக்கு சீட் தருகிறேன் என்றார். எனக்கு தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லாததால் பிரச்சாரத்துக்கு மட்டும் வருகிறேன் என்று கூறினேன். கோவில்பட்டியில் பிரசாரம் செய்ய உள்ளேன். உண்மைத் தொண்டர்கள் இன்றும் என்னுடன் இருக்கிறார்கள். பிரச்சாரத்துக்குச் செல்வதற்கு முன் என்னை மிரட்டப் பார்க்கிறார்கள். கம்பு சுத்தி ரொம்ப நாளாயிற்று. சுற்றிப் பார்க்க (சிலம்பம்) வேண்டும் என்று கூறியுள்ளேன் என்று கார்த்திக் கூறினார்.












Click it and Unblock the Notifications