சித்ரா பவுர்ணமியில் வைகையில் எழுந்தருளும் கள்ளழகர்..16ல் மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் திருவிழாவையொட்டி மதுரை மாவட்டத்திற்கு வரும்16 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மதுரை: கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் திருவிழாவையொட்டி மதுரை மாவட்டத்திற்கு ஏப்ரல் 16-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
சித்ரா பவுர்ணமியை ஒட்டி மதுரையில் 12 நாட்கள் சித்திரை திருவிழா நடைபெறும். அதன்படி, உலக புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தினசரியும் சுவாமி சுந்தரேஸ்வரர் பிரியா விடையுடனும், மீனாட்சி அம்மனும் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய மாசி வீதிகளில் கூடுகின்றனர்.

மீனாட்சி திருக்கல்யாணம்
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பட்டாபிஷேகம் இன்று நடைபெறுகிறது. நாளை திக் விஜயம், நாளை மறுநாள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. 15ஆம் தேதியன்று திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது. இந்த விழாக்களை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மதுரையில் கூடுவார்கள்.

கள்ளழகர் வருகை
இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு, வரும் 16ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக மதுரை ஆழ்வார்புரம் ஆற்றுப் பகுதியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் விடுமுறை
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவையொட்டி மதுரை மாவட்டத்திற்கு ஏப்ரல் 16ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கருவூலங்கள், சார்நிலை கருவூலங்கள், வங்கிகள் குறைந்த அளவு ஊழியர்களுடன் செயல்படும் எனவும் கூறியுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்கள் அனுமதித்து திருவிழா நடத்துவதால் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்கு வழக்கத்தை விடவும் திரளான பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கள்ளழகர் கட்டும் பட்டுப்புடவை
தங்கக் குதிரை வாகனத்தில் ஏறி வரும் கள்ளழகர் எந்த வண்ணப் புடவை கட்டி ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கேற்ப அந்த வருடத்தில் நல்லது - கெட்டது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பச்சைப்பட்டு கட்டி வந்தால் நாடு செழிப்பாக இருக்கும். சிவப்புப் பட்டு கட்டிவந்தால் அந்த வருடம் போதிய விளைச்சலுமிருக்காது. நாட்டில் அமைதியும் இருக்காது. பேரழிவு ஏற்படும் என்கின்றனர். இந்த ஆண்டு அழகர் எந்த பட்டு கட்டி ஆற்றில் இறங்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications