முதல்வர் ஸ்டாலின் விசிட் காரணமாக துணி கட்டி கால்வாய் மறைப்பு? மதுரை ஆட்சியர் விளக்கம்
மதுரை: முதல்வர் ஸ்டாலின் வருகையையொட்டி மதுரையில் தூர்வாரப்படாத கால்வாய் துணியால் மறைக்கப்பட்டுள்ள வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. பந்தல்குடி கால்வாய் துணியால் மறைப்பு குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
மதுரைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வருகை தரவுள்ளார். இதையொட்டி, மதுரை மாநகராட்சி மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறை முக்கிய சாலைகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். நாளை மதுரை உத்தங்குடியில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்தப் பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக முதல்வர் ஸ்டாலின் இன்று ரோடு ஷோவில் பங்கேற்கிறார்.

மதுரை விமான நிலையம் அருகே 20 கி.மீ தொலைவுக்கு ரோட் ஷோ தொடங்குகிறது. இது அவனியாபுரம், ஜெய்ஹிந்த்புரம், காளவாசல் பைபாஸ் சாலை, ஆரப்பாளையம், புதிய ஜெயில் சாலை வழியாக மேயர் முத்து சிலை அருகே மேலபொன்னகரத்தில் நிறைவடைகிறது. பின்னர் முதல்வர் ஸ்டாலின் சர்க்யூட் ஹவுஸில் இரவு தங்குகிறார்.
முதல்வர் ஸ்டாலின் மேற்கொள்ளும் ரோடு ஷோவை ஒட்டி விமான நிலையத்தில் இருந்து நகரத்திற்கு செல்லும் முக்கிய சாலைகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்றன. வில்லாபுரம், ஜெய்ஹிந்த்புரம், பைபாஸ் சாலை மற்றும் அருப்புக்கோட்டை மெயின் ரோடு ஆகிய இடங்களில் சாலைகள் சரி செய்யப்பட்டுள்ளன. முதல்வர் செல்லும் வழித்தடங்கள் சுத்தமாகவும், பாதுகாப்பாகவும், மக்கள் கூட்டத்திற்கு ஏற்றதாகவும் இருப்பதை உறுதி செய்யும் விதத்தில் பணிகள் நடந்தன.
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தரும் நிலையில் மதுரை பந்தல்குடி சாலையில் சாக்கடை கழிவுகள் கலக்கும் பகுதி துணியால் மூடப்பட்டுள்ளது. தூர்வாரப்படாத நிலையில் சுமார் 2 கி.மீ.க்கு சாக்கடை கால்வாயை அதிகாரிகள் துணியால் மூடியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. முதல்வர் ஸ்டாலினின் ரோடு ஷோ நடக்கும் வழியில் அவரது கண்ணில் படாமல் இருக்க இந்த நடவடிக்கை என மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக சர்ச்சை எழுந்த நிலையில், மதுரை பந்தல்குடி கால்வாய் துணியால் மறைப்பு குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும். கால்வாய் மறைக்கப்பட்ட விவகாரம் தற்போதுதான் எனக்கு தெரிய வந்துள்ளது என மதுரை ஆட்சியர் சங்கீதா விளக்கம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications