நாதக நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக் பேச்சுக்கு அரிட்டாபட்டியில் எழுந்த எதிர்ப்பு.. பெரும் பரபரப்பு!
மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே, டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டத்தில் பேசிய நாதக நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக் பேச்சுக்கு அங்கிருந்தவர்கள் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி உட்பட 48 கிராமங்களில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு இந்துஸ்தான் நிறுவனத்துக்கு ஏல அனுமதி வழங்கியது. பல்லுயிர் தலமாக அறிவிக்கப்பட்டுள்ள அரிட்டாப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுரங்கம் அமைக்கப்பட்டால் சுற்றுச்சூழல், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே சுரங்கத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என கிராம மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

திமுக, அதிமுக, இடதுசாரிகள், பாமக, நாதக உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அரசியல் கட்சித் தலைவர்கள் அரிட்டாபட்டிக்கே சென்று மக்களைச் சந்தித்தனர். அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஏல அனுமதி வழங்கப்பட்டதை எதிர்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றினார்.
தமிழ்நாட்டில் எங்குமே டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதி அளிக்கப்படாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தொடர் அழுத்தம் காரணமாக திட்டத்தை மறு ஆய்வு செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எனினும், மக்கள் போராட்டம் தொடர்ந்து வருகிறது. அரிட்டாபட்டி பகுதியை சுற்றியுள்ள 48 கிராமங்களையும் தொல்லியல் மற்றும் வேளாண் பாதுகாப்பு மண்டலமாக தமிழக அரசு அறிவிக்கும் வரை விவசாயிகள் போராட்டம் தொடரும் என அறிவித்து, போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் சார்பில் டங்க்ஸ்டன் குறித்தான விழிப்புணர்வுப் பொதுக்கூட்டம் மதுரை, மேலூர் அருகே அரிட்டாபட்டி பகுதியில் உள்ள அ.வல்லாளப்பட்டியில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் பங்கேற்றார்.
அப்போது, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றி இடும்பாவனம் கார்த்திக் விமர்சித்துக் காட்டமாகப் பேசியதற்கு, அங்கிருந்தவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பதிலுக்கு நாம் தமிழர் கட்சியினரும் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து, இடும்பாவனம் கார்த்திக், இங்கே மட்டுமில்லை, தமிழ்நாடு முழுக்கப் பேசுவேன். நான் பேசினால் ரோஷம் வருகிறதா? கல்லூரி வளாகத்தில் பெண் பிள்ளை சீரழிக்கப்பட்டபோது இந்த ரோஷம் எங்கே போனது? என மைக்கிலேயே ஆவேசமாக கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, அங்கு வாக்குவாதம் எழுந்து வந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications