ரூ.1000 வழங்க 1008 காரணம் கூறும் திமுக.. பிடிஆர் டான் எனில் நாங்க சூப்பர் டான்! செல்லூர் ராஜூ கோபம்
மதுரை: ‛‛தேர்தல் வாக்குறுதியில் ரூ.1000 வழங்குவதாக கூறிய திமுக தற்போது 1008 காரணங்களை கூறி வருகிறது. பிடிஆர் டான் என்றால் நாங்க சூப்பர் டான்'' என திமுக அரசை அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கடுமையாக விமர்சனம் செய்தார்.
அதிமுகவில் ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி இடையே ஒற்றை தலைமை தொடர்பான மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் அதிமுக இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகிறது.
ஓ பன்னீர் செல்வம் தரப்பில் ஒரு அணியும், எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இன்னொரு அணியும் செயல்பட்டு வருகிறது. இருப்பினும் அதிமுக பொன்விழா நிறைவு மற்றும் 51வது ஆண்டு துவக்க விழா தனித்தனியே நடத்தப்பட்டு வருகிறது.

மதுரையில் பொதுக்கூட்டம்
மதுரை டிஎம் கோர்ட் பகுதியில் அதிமுக பொன்விழா நிறைவு மற்றும் 51வது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் நடந்தது. இதில் எடப்பாடி பழனிச்சாமி அணியில் உள்ள அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பங்கேற்று பேசினார். அப்போது அவர் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும் கலகலப்பாகவும் பேசினார். இதில் செல்லூர் ராஜூ பேசியதாவது:

வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக
தமிழக அரசின் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு ஏழைகள், பெண்களின் கஷ்டங்கள் தெரியாது. அவருக்கு படித்தவர்கள் பணக்காரர்கள் பற்றி மட்டும்தான் தெரியும். அமைச்சர்கள் தரக்குறைவாக பேசி வருகின்றனர். பெண்களுக்கு ரூ.1,000 கொடுப்பதற்கு 1008 காரணங்கள் சொல்கின்றனர். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

நாங்கள் சூப்பர் டான்
நிதி அமைச்சர் டான் என்றால் நாங்கள் சூப்பர் டான். தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்திவிட்டு காரணம் கூறிவருகிறார். இதற்கு நிதி அமைச்சர் தேவை இல்லையே. ஒரு அதிகாரி போதுமே. திமுக ஆட்சிக்கு டான் நிதியமைச்சர் தான் ஆபத்து. மேயரை எதிர்த்து அமைச்சரே உண்ணாவிரதம் இருப்பேன் என்று கூறுவது உலகத்திலேயே எங்கும் நடைபெறாதது. நிர்வாகம் எப்படி இருக்கிறது என்பதற்கு உதாரணம் தான் திமுக ஆட்சி.

முதல் அமைச்சரே புலம்புகிறார்
தற்போது மக்கள் அதிமுக ஆட்சியை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார்கள். முதல் அமைச்சரே புலம்பும் அளவுக்கு அமைச்சர்களும், திமுக நிர்வாகிகளும் செயல்பட்டு வருகின்றனர். ஜாதிக்குறித்து ஆர்எஸ் பாரதி அவதூறாக பேசியுள்ளார். ஓசி.. ஓசி.. என்று பேசும் திமுக அமைச்சர் பயன்படுத்தும் அனைத்தும் ஓசிதான். பத்து மாதங்களில் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. புதிய போக்குவரத்து விதி அமலுக்கு வந்துள்ளது. இது மாதிரி அபராதம் விதித்தால் ஊழலுக்கு வழிவகுக்கும். இது தவறான முன்னுதாரண சட்டம். '' என விமர்சனம் செய்தார்.












Click it and Unblock the Notifications