Women's day மதுரை பூரணம்மாள் ரூ 7 கோடி நிலத்தை மட்டும் தானம் கொடுக்கல! 32 வயதில் செய்தது இருக்கே!
மதுரை: மதுரை அரசு பள்ளிக்கு 7 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை தானமாக வழங்கியது மட்டுமல்லாமல் தனது தூரத்து சொந்தத்திற்கு ஒரு கிட்னியையே தானமாக கொடுத்த கருணையின் தேவதை ஆயி பூரணம்மாள் குறித்து இந்த மகளிர் தினத்தில் தெரிந்து கொள்வது அவருக்கு பெருமை சேர்ப்பதுடன் அவரை போல் பிறருக்கு உதவும் தாயுள்ளத்தை வளர்த்துக் கொள்வோம்.
இன்று மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. தாய் என்பவள் தனது குழந்தைக்கு மட்டுமல்லாமல் மற்ற குழந்தைகளையும் சேர்த்து தன் குழந்தையாகவே பாவிப்பாள். அந்த அளவுக்கு கருணை இருக்கிறது.

தன் குழந்தை குடித்தது போக மீதமுள்ள பாலை இன்றும் பல பெண்கள் தாய்ப்பால் சேகரிப்பு மையங்களில் கொடுத்து வருவதை பார்த்திருக்கிறோம். அது போல் எத்தனையோ தாய்மார்கள் மற்ற குழந்தைக்கும் பால் கொடுத்துள்ளார்கள்.
தாய் ஸ்தானம்
எனவேதான் தாய் ஸ்தானத்திற்கு என ஒரு பெருமை இருக்கிறது. அந்த வகையில் ஏதோ ஒரு குழந்தைக்கோ இரு குழந்தைக்கோ தாய் என இல்லாமல், ஒரு அரசு பள்ளிக்கே தாய் போல் இருக்கும் ஆயி பூரணம்மாள் குறித்து கேள்விப்பட்டிருப்பீர்கள்.
மதுரை பூரணம்மாள்
மதுரை மாவட்டம் கே.புதூர் அருகே உள்ள சர்வேயர் காலனி பகுதியைச் சேர்ந்தவர்கள் உக்கிரபாண்டியன்- பூரணம்மாள் தம்பதி. இவர்களுக்கு ஒரே மகள் ஜனனி! இந்த நிலையில் உக்கிரபாண்டியன் கனரா வங்கியில் அலுவலக உதவியாளராக பணியாற்றியிருக்கிறார். இவர் 1991 ஆம் ஆண்டு பணியில் இருந்த போதே இறந்துவிட்டார். இதனால் இடிந்து போன பூரணம்மாள் தனது மகளை பார்த்து தனது துக்கத்தை தேற்றிக் கொண்டிருந்தார்.
பொறுமையின் சிகரம்
ஆனால் உடல்நல பிரச்சினையால் தனது மகளையும் இழக்கும் நிலை பூரணம்மாளுக்கு ஏற்பட்டது. பொறுமையின் சிகரம் தாய் என்றால் அந்த தாய்க்கு இத்தனை கொடூரங்களை கொடுக்க கடவுளுக்கு எப்படித்தான் மனம் வந்தது என தெரியவில்லை.
ஜனனியின் இறப்பு
ஜனனியின் இறப்பால் வாடிய பூரணம்மாள் தனது மகளின் நினைவாக பல்வேறு உதவிகளை செய்ய வேண்டும் என நினைத்தார். அப்போதுதான் அவர் கொடிக்குளம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை அரசு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவதற்காக ரூ 7 கோடி மதிப்பிலான தனது சொத்தை தானமாக வழங்கியுள்ளார். பள்ளிக்கு கட்டடம் கட்ட அவர் கொடுத்த இடத்தின் அளவு ஒரு ஏக்கர் 52 செண்டு நிலமாகும்.
தானப் பத்திரம்
இந்த நிலத்தை கொடுத்த பூரணம்மாளின் ஒரே ஒரு கோரிக்கை என்ன தெரியுமா, தான் கொடுத்த இடத்தை உயர்நிலை பள்ளி கட்டடம் கட்ட மட்டுமே பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான். மேலும் தானப் பத்திரத்தை அன்றைய தேதியிலேயே அரசுக்கு கொடுத்துவிட்டார்.
ஜனனியின் நினைவு வளாகம்
அது போல் பள்ளிக்கு கட்டடம் கட்டும் போது ஜனனியின் நினைவு வளாகம் என பெயர் சூட்ட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். தற்போது பூரணம்மாள் ஒரு வங்கியில் சிறிய பணிகளை செய்து வருகிறார்.
வருமானம்
அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தையும் தனக்கென வைத்துக் கொள்ளாமல் அதையும் பல்வேறு நலத்திட்டங்களுக்கு செலவு செய்து வருகிறார். மேலும் இவர் பிறருக்கு உதவுவதற்காக தனக்கு உடல் உபாதைகளை கொடுக்க கூடாது என்றும் ஆயுளை நீட்டிக்க வேண்டும் என்றும் கடவுளிடம் வேண்டிக் கொள்கிறாராம். தற்போது 53 வயதாகும் பூரணம்மாள் 20 ஆண்டுகளுக்கு முன்பு தனது ஒரு கிட்னியை கூட யாரோ தூரத்து சொந்தக்காரருக்கு தானமாக கொடுத்துவிட்டாராம். ரத்த சொந்தத்திற்கே 10 ரூபாய் செலவு செய்ய யோசிக்கும் இந்த காலத்தில் ஒரு கிட்னியையே தானமாக கொடுத்த பூரணம்மாள், பூரண ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகள்.












Click it and Unblock the Notifications