மதுரையில் ஷவர்மா கடைகளில் திடீர் சோதனை.. பாக்ஸை திறந்து பார்த்தால் அதிர்ச்சி.. என்னங்க இது? கவனம்!
மதுரை: கேரளாவில் சமீபத்தில் ஷவர்மா சாப்பிட்டு மாணவி பலியான நிலையில் இன்று மதுரையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஷவர்மா கடைகளில் தீவிர சோதனை செய்தனர்.
கேரளாவில் சமீபத்தில் காசர்கோடு மாவட்டத்தில் ஷவர்மா சாப்பிட்ட பலர் மயக்கம் அடைந்தனர். கிட்டத்தட்ட 40 பேர் மயக்கம் அடைந்து வாந்தி எடுத்தனர். கசர்கோர்ட்டில் Ideal Food Point என்ற அந்த கடையில் ஷவர்மா சாப்பிட்ட மாணவி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஷவர்மா குறித்த அச்சத்தை மக்கள் இடையே இது ஏற்படுத்தியது. ஷவர்மாவில் இருந்த கிருமிதான் அந்த மாணவியின் மரணத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
ஷவர்மா என்றால் என்ன?.. எந்த நாட்டிலிருந்து வந்தது?.. ஷவர்மாவால் இறப்பு நேரிட்டது எப்படி? #shawarma

ஷவர்மா
இதையடுத்து தற்போது தமிழ்நாடு முழுக்க ஷவர்மா கடைகளில் தொடர் சோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. ஷவர்மா முறைப்படி வைக்கப்பட்டு இருக்கிறதா, சிக்கன் நல்ல நிலையில் இருக்கிறதா, கடைகளில் கரைப்பான் பூச்சி போன்ற பூச்சிகள் இருக்கிறதா என்று சோதனை செய்யப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக மதுரையில் இருக்கும் ஷவர்மா கடைகளில் இன்று கடுமையான சோதனைகள் செய்யப்பட்டன.

மதுரை ஷவர்மா
உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் 50க்கும் மேற்பட்டோர் சாலைகளில் இறங்கி கடுமையான சோதனைகளை செய்தனர். எங்கெல்லாம் ஷவர்மா கடைகள் இருக்கிறதோ அங்கெல்லாம் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஷவர்மா வைத்திருக்கும் கம்பிகளை பிடிங்கி அது எப்படி இருக்கிறது. சிக்கன் புதியதா.. மயோனைஸ் நல்ல நிலையில் இருக்கிறதா என்று ஆய்வு செய்தனர். கடைகளுக்கு உள்ளே சென்றும் தீவிரமான சோதனைகளை அதிகாரிகள் மேற்கொண்டனர்.

சோதனை
உள்ளே இருக்கும் சிக்கன்கள் புதிதாக இருக்கிறதா என்றும் சோதனை செய்தனர். ஷவர்மாவில் பொதுவாக முட்டைகோஸ் உள்ளிட்ட காய்கறிகள் வைக்கப்படும். அதேபோல் ருமாலி ரொட்டி போன்ற ரொட்டிகள் வைக்கப்படும். இவையும் சுத்தமாக இருக்கிறதா அல்லது பழசை பயன்படுத்துகிறார்களா என்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் சில கடைகளில் பெட்டியை திறந்து பார்த்ததில் அதில் பழைய சிக்கன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதிர்ச்சி
அதிகாரிகள் 52 ஷவர்மா கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் 5 கடைகளில் பழைய சிக்கன் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதில் சில கடைகளில் பழைய மயோனைஸ் இருந்ததையும் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து இந்த கடைகளில் இருந்து 10 கிலோ அழுகிய கோழி இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 5 கடைகளுக்கு நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது.