இது லிஸ்ட்லயே இல்லையே.. “வருங்கால பிரதமர் எடப்பாடியார்”.. பரபரக்கும் அதிமுக போஸ்டர்கள்.. பாஜக ஷாக்!
மதுரை: அதிமுக மாநாடு வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் நடைபெறவுள்ள நிலையில், 'வருங்கால பாரத பிரதமர் எடப்பாடியார்' என்ற வாசகம் இடம்பெற்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக சார்பில் வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரை வலையங்குளம் பகுதியில் 'வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு' என்ற பெயரில் பிரமாண்ட மாநாடு நடைபெற உள்ளது. இதையொட்டி, மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழு, வரவேற்புக் குழு என பல்வேறு குழுக்களை அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அமைத்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் இந்த மாநாட்டின் ஏற்பாடுகளுக்காக தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், மதுரை மாநாட்டில் எழுச்சி உரையாற்ற உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று அதிமுகவினர் பிரமாண்ட பேனர்கள், போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். இந்நிலையில்,'வருங்கால பாரத பிரதமர் எடப்பாடியார்' என்ற வாசகம் இடம்பெற்ற போஸ்டர்களும் ஒட்டப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடியை மூன்றாவது முறையாகப் பிரதமர் ஆக்குவோம் எனக் கூறி அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். பாஜக கூட்டணியில் தமிழ்நாட்டில் அதிக இடங்களில் பாஜக நிற்பதற்கு முயன்று வருகிறது. இப்படியான சூழலில், 'வருங்கால பிரதமர் எடப்பாடியார்' என்ற போஸ்டர்கள் பாஜகவினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளன.
சிவகங்கை மாவட்டம் மணலூரைச் சேர்ந்த மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி துணை செயலாளர் வழக்கறிஞர் மணிமாறன் தான், 'வருங்கால பிரதமர் எடப்பாடியார்' என்ற வாசகத்தோடு நாடாளுமன்றக் கட்டிட பின்னணி படத்தோடு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக மதுரை, சிவகங்கை மாவட்ட பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டி வருகிறார்.'வருங்கால பாரத பிரதமர் எடப்பாடியார்' போஸ்டர்கள் பாஜகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.
பாஜக அதிமுக கூட்டணியில் அவ்வப்போது கருத்து மோதல்கள் ஏற்படுவதும், பின்னர் டெல்லி தலைமை தலையிட்டு சமாதானப்படுத்துவதும் தொடர்ந்து வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி வருங்கால பிரதமர் என்று அதிமுகவினர் போஸ்டர் ஒட்டியிருப்பது, பாஜகவினரை சீண்டுவதாகவே பார்க்கப்படுகிறது. இந்த போஸ்டர்கள் சமூக வலைத்தளங்களிலும் பகிரப்பட்டு வருகின்றன.

சில வாரங்களுக்கு முன்பாக வேலூரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் பிரதமராக வரவேண்டும். கடந்த காலத்தில் பிரதமராக வருவதற்கான வாய்ப்பு ராஜாஜி, காமராஜர், மூப்பனார் ஆகியோருக்கு கிடைக்க வேண்டியது தள்ளிப்போனது. அதற்குக் காரணம் திமுக எனப் பேசியிருந்தார்.
அதைக் குறிப்பிட்டுப் பேசிய அதிமுக எம்.பி தம்பிதுரை, "தமிழர் பிரதமராக ஆக வேண்டும் என அமித்ஷா கருத்தை வரவேற்கிறோம். அமித்ஷா தெரிவித்த வார்த்தையை செயல்படுத்துவார்கள் என்கிற நம்பிக்கை உள்ளது. அப்படி வரும் பட்சத்தில் எடப்பாடி பழனிசாமி தான் பிரதமர் வேட்பாளராக வரவேண்டும். அவருக்கு பிரதமர் ஆக அனைத்து தகுதிகளும் உள்ளது." எனக் கூறியிருந்தார். இப்போது அதிமுக மாநாட்டு போஸ்டர்களிலும் இதனை வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications