முன்னாள் பள்ளி கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் உட்பட 3 பேருக்கு சிறை! ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு
மதுரை: முன்னாள் பள்ளிக் கல்வித்துறை செயலாளராக இருந்த பிரதீப் யாதவ் உள்ளிட்ட மூன்று கல்வித்துறை அதிகாரிகளுக்கு ஐகோர்ட் மதுரை கிளை இரண்டு வாரங்கள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. இதற்கு என்ன காரணம் என்பதைப் பார்க்கலாம்.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஞானப்பிரகாசம் என்பவர் பணப் பலன்கள் குறித்துத் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் கடந்த 2019இல் தீர்ப்பளித்தது. அவரது வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு நீதிமன்றம் 2019இல் உத்தரவிட்டது.

நீதிமன்றத்தின் உத்தரவு வந்த பிறகும் கூட அந்த உத்தரவை அதிகாரிகள் செயல்படுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், அதனைச் செயல்படுத்தத் தவறிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 2020ஆம் ஆண்டில் ஞானப்பிரகாசம் மற்றொரு வழக்கைத் தாக்கல் செய்தார்
அதில் நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தாத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை, அப்போது கல்வித்துறை செயலாளராக இருந்த பிரதீப் யாதவ் ஐஏஎஸ் மற்றும் அதிகாரிகளை இது தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டார்.
இதற்கிடையே இந்த வழக்கு நீதிபதி பட்டு தேவாநாந்த் முன்பு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையில் கோர்ட் உத்தரவைக் கல்வித் துறை அதிகாரிகள் முறையாகச் செயல்படுத்தாதது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அப்போது கல்வித் துறை செயலாளராக இருந்த பிரதீப் யாதவ், ஆசிரியர் பயிற்சி நிறுவன இயக்குநர் முத்து பழனிசாமி, நெல்லை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் பூபாலா ஆண்டோ ஆகியோருக்கு இரண்டு வாரம் சிறைத் தண்டனை அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், அபராத தொகையைச் செலுத்தத் தவறினால், கூடுதலாக 3 நாட்கள் சிறையில் இருக்க வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார். இவர்கள் 3 பேரும் வரும் 9ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
அப்போது பள்ளிக் கல்வித் துறை செயலாளராக இருந்த பிரதீப் யாதவ் இப்போது நெடுஞ்சாலைத்துறை உயர் செயலாளராக இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications