காதலிக்கும்போது கட்டிபிடித்து, முத்தம் கொடுப்பது குற்றம் இல்லை! நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பு
மதுரை: இளம் பருவத்தினர் காதலிக்கும்போது கட்டிப்பிடிப்பதும், முத்தம் கொடுப்பதும் குற்றம் ஆகாது என்று இளைஞர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிரடியாக உத்தரவிட்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் 21 வயது இளைஞர். இவரும் 19 வயது இளம்பெண் ஒருவரும் காதலித்துள்ளனர். இருவரும் காதலில் இருந்தபோது வீட்டுக்கு வெளியே சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் அந்த இளைஞர், இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதுதொடர்பாக இளம்பெண் சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. அந்த புகாரில் இளைஞர் மீது அவர் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
அந்த புகாரில் ‛‛காதலிக்கும் போது, இளைஞர் தன்னை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தார். இப்போது திருமணம் செய்ய மறுக்கிறார். காதலித்து விட்டு என்னை ஏமாற்றுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறியிருந்தார். இந்த புகாரை தொடர்ந்து அந்த இளைஞர் மீது இந்திய தண்டனை சட்டம் 354-A(1)(i) (உடல் தொடர்பு மற்றும் வெளிப்படையாக அனுமதியின்றி பாலியல் உணர்வை வெளிப்படுத்துதல்) பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு என்பது ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. போலீஸ் சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் அந்த இளைஞர் சார்பில் தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு என்பது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ‛‛வளரிளம் பருவத்தில் காதலிப்பவர்கள் கட்டி பிடிப்பதும் முத்தம் கொடுப்பதும் இயல்பானதாகவே பார்க்கப்படுகிறது. மனுதாரர் திருமணம் செய்ய மறுத்த குற்றச்சாட்டை அப்படியே எடுத்துக் கொண்டாலும் காதலிப்பவர்கள் கட்டி பிடிப்பதும் முத்தம் கொடுப்பதும் ஐபிசி 354 ஏ (1) (I) பிரிவின் கீழ் குற்றமாக பார்க்கும் வகையில் விபரம் எதுவும் இல்லை '' என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறினார்.
அதோடு இளைஞர் மீதான வழக்கை ரத்து செய்வதாக கூறி அவர் அதிரடியாக உத்தரவிட்டார். இது தொடர்பாக கீழமை நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கையும் ரத்து செய்து உத்தரவிட்டார். சிறார் ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமாகாது என்று ஏற்கனவே நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பு ஒன்றில் கூறியிருந்தார். அந்த தீர்ப்பு என்பது உச்சநீதிமன்ற கண்டனத்திற்கு உள்ளாகி ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் தான் தற்போது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த தீர்ப்பை வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications