சக பெண் அதிகாரியை ஆபாச வீடியோ எடுத்த பச்சையப்பன் சஸ்பெண்ட்... தமிழக அரசு அதிரடி
மதுரை: குளியலறையில் கேமரா பொருத்திய விவகாரம் தொடர்பாக, இந்து அறநிலையத்துறை இணை இயக்குனர் பச்சையப்பன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்து அறநிலையத்துறையின் மதுரை மண்டல இணை இயக்குநரான பச்சையப்பன் பற்றி தொடர்ந்து பல்வேறு புகார்கள் வந்த நிலையில், தனது சக பெண் அதிகாரியின் புகாரில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அண்மையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் நிகழ்ச்சியில் பணி செய்ய திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து சதுரகிரி வந்திருந்த பெண் அதிகாரி அறநிலையத்துறை விடுதியில் தங்கியிருந்தார். அங்கு தங்கியிருந்த மண்டல இணை இயக்குநர் பச்சையப்பன் பேனா கேமராவால், அந்தப் பெண் அதிகாரி குளிப்பதை படம் எடுக்க செட் செய்து வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

மறுநாள் பேனா கேமரா இருப்பதை பார்த்த அந்தப் பெண் அதிகாரி அதை எடுத்துச் சென்று சோதனை செய்து பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே மதுரை மாவட்ட காவல்துறை உயர் அதிகாரியிடம் புகார் செய்தார். இதையடுத்து சக பெண் அதிகாரியை ஆபாச வீடியோ எடுத்த வழக்கில் பச்சையப்பன் கைது செய்யப்பட்டார்.

அவர் மீது துறை ரீதியான விசாரணைகள் நடைபெற்றன. அதன் முடிவில் தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் அபூர்வ வர்மா இந்து அறநிலையத் துறையின் இணை இயக்குனர் பச்சையப்பனை பணியிடை நீக்கம் செய்து இன்று உத்தரவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications
