150 ஆடு! 300 கோழி! 2500 கிலோ கமகம பிரியாணி! களைகட்டிய வடக்கம்பட்டி முனியாண்டி கோயில் திருவிழா
திருமங்கலம்: மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே வடக்கம்பட்டியில் ஸ்ரீ முனியாண்டி கோயில் திருவிழாவின் 91 ஆவது ஆண்டு குருபூஜை விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரியாணி பிரசாதமாக வழங்கப்பட்டது.
மதுரை மாவட்டம் வடக்கம்பட்டியில் உள்ள முனியாண்டி கோயில். இந்த கோயிலில் முனியாண்டி விலாஸ் பெயரில் ஹோட்டல் நடத்தும் தரப்பினர் பூஜை செய்கிறார்கள். இவர்களில் சமூகரீதியாக இரு பிரிவினர் பிரிந்து குறிப்பிட்ட நாட்களில் திருவிழாவை நடத்துகிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் 2ஆவது வெள்ளிக்கிழமையில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. இதற்காக காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் ஊர்வலமாக பால்குடம் எடுத்து வந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். மேலும் மாலையில் பெண்கள் தங்களது வீடுகளில் இருந்து தேங்காய் பழதட்டுக்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 150 ஆடுகள், 300-க்கும் மேற்பட்ட கோழிகள் சுவாமிக்கு பலியிடப்பட்டு 2500 கிலோ அரிசியில் பிரியாணி தயாரிக்கப்பட்டது. சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டதை அடுத்து பக்தர்களுக்கு பிரியாணி பிரசாதம் வழங்கப்பட்டது.
இந்த கோயில் திருவிழாவிற்காக பக்தர்கள் வெளிமாநிலங்களில் இருந்தாலும் மதுரையில் ஆஜராகிவிடுகின்றனர். குறிப்பாக மதுரை, விருதுநகர் மாவட்ட மக்கள் அதிகமாக கலந்து கொள்கின்றனர்.
10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு சுடச் சுட பிரியாணி வழங்கப்பட்டது. இதுகுறித்து ஹோட்டல் உரிமையாளர்கள் கூறுகையில் முதலில் காரைக்குடியில் தான் முனியாண்டி விலாஸ் ஹோட்டலை தொடங்கினோம். இப்படியே விருதுநகர், மதுரை உள்பட தமிழகம் முழுவதும் கிளைகள் தொடங்கப்பட்டன.
இந்த ஹோட்டல்களுக்கு வரும் முதல் வாடிக்கையாளர் வழங்கும் பணத்தை அப்படியே உண்டியலில் சேகரித்து ஒவ்வொரு ஆண்டும் முனியாண்டி சுவாமி பூஜைக்கு வழங்குவதை ஐதீகமாக கடைப்பிடிக்கிறோம். எவ்வளவு நெருக்கடி வந்தாலும் அந்தப் பணத்தை எடுக்க மாட்டோம்.
பசியோடு வருபவர்களுக்கு பணம் வாங்கி கொண்டு உணவு வழங்குவது பாவம். அந்த பாவத்துக்கு பிராயசித்தமாக வாடிக்கையாளர் கொடுக்கும் பணத்திலிருந்து முனியாண்டிக்கு பிரியாணி படைத்து வழிபடுகிறோம் என்றனர்.












Click it and Unblock the Notifications