பொதுநல மனுக்கள் மூலம் பணம் பறிப்பதா? மனுவை வாபஸ் பெற்றால் இனி அபராதம்! அதிரடியாக உத்தரவிட்ட ஹைகோர்ட்
சென்னை: பொதுநல வழக்குகளைத் தாக்கல் செய்து, அவற்றின் மூலம் பணம் பறிக்கும் செயல்பாடுகளை அனுமதிக்கக் கூடாது எனவும், பொதுநல வழக்கு தொடர்பவர்கள் முறையான காரணம் இன்றி மனுவை திரும்ப பெற அனுமதி கோரினால் அதிக அபராதம் விதிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
காரைக்குடியைச் சேர்ந்த பூல்பாண்டி என்பவர் கடந்த 2021 ஆம் ஆண்டு காரைக்குடி நகராட்சியில் அனுமதி இன்றி கட்டப்பட்ட கட்டிடம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கோரி பொதுநல வழக்கினை தாக்கல் செய்திருந்தார்.
அந்த வழக்கு இன்று நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் மனுவை திரும்பப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது.

அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், "பொதுநல வழக்கு தொடர்ந்து, அதன் மூலம் பணம் பறிக்கும் நிலை உள்ளது. அது போல பணம் கிடைத்தவுடன், பொதுநல வழக்கு திரும்பப் பெறப்படுகிறது. இது ஏற்கத்தக்கதல்ல. இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். 4 ஆண்டுகளாகியும் வழக்கு நிலுவையிலே வைக்கப்பட்டிருக்கிறது.
பொதுநல வழக்கை சிலரின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பயன்படுத்துவது அதிர்ச்சி அளிக்கிறது.
அரசு அலுவலர்களும் இதில் நோட்டீஸ் கூட அனுப்பாமல் இருந்தது ஏற்கத்தக்கதல்ல. தற்போது தான் நோட்டீசே அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு பொதுநல வழக்கு என தொடர்ந்து ஆதாயம் பெற்றவுடன் திரும்ப பெரும் நடவடிக்கைகள் தடுக்கப்பட வேண்டும். ஆகவே பொதுநல வழக்கை முறையான காரணம் இன்றி திரும்ப பெற அனுமதி கோரினால் அதிக அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்து, மனுதாரர் 9ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications