மதுரையில் வீடுகளில் நாய், மாடு, ஆடு வளர்த்தால் இனி வரி... மாநகராட்சி அறிவிப்பு
மதுரை: மதுரையில் வீடுகளில் நாய், மாடு, ஆடு வளர்த்தால் இனி வரி செலுத்த வேண்டும் என அந்த மாநகராட்சி அறிவித்துள்ளது. அது போல் இறைச்சி மீன் கடைகளுக்கு புதிதாக உரிமம் வரி விதிக்கப்படுகிறது என்றும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் மாநகராட்சியில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆடு மாடு, குதிரை, நாய்கள் போன்ற கால்நடைகளை அதன் உரிமையாளர்கள் சாலைகளில் அலட்சியமாக விடுவதால் வாகனங்களில் செல்பவர்கள் விபத்துக்குள்ளாகி உயிரிழப்பு ஏற்படுகிறது.

நாய்கள் கடித்து காயம்
அது மட்டுமல்லாமல் கால்நடைகளும் காயமடைவதாகவும், நாய்கள் கடித்து காயம் ஏற்படுத்துவதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்துவந்த நிலையில் மதுரை மாநகராட்சி தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

மாமன்ற கூட்டம்
அதன்படி கடந்த 2011ஆம் ஆண்டு மதுரை மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தில் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட அபராத தொகை மற்றும் உரிமம் வசூலிப்பு தொகையை அறிவித்துள்ளது. மதுரை மாநகராட்சிகுட்பட்ட அனுமதிக்கப்படாத இடங்களில் விற்பனைக்காக ஆடு, மாடு வதை செய்தால் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், தெருக்களில் ஆடு, மாடு, குதிரைகளை அலட்சியமாக விடும் உரிமையாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதமும், தெருக்களில் அச்சுறுத்தும் மற்றும் சுகாதார சீர் கேடு விளைவிக்கும் வகையில் நாய்களை விட்டால் 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது.

சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும்
திடக்கழிவுகளை கொட்டும் இறைச்சி கடைகளுக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது மதுரை மாநகராட்சி நிர்வாகம். இந்த அபராத விதிப்பு தொடர்பாக 15 நாட்களுக்குள் பொதுமக்கள் தங்களுடைய கருத்துக்களை எழுத்துபூர்வமாக மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் தெரிவிக்கலாம் எனவும் கூறியுள்ளது. இது தொடர்பாக ஏதும் ஆட்சேபனைகள் இருந்தால் மாநகராட்சி நகர் நல அலுவலருக்கு எழுத்து மூலம் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சீர்கேடுகள்
மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஏற்படும் சுகாதார சீர்கேடுகளை தடுக்கும் வகையில் மதுரை மாநகராட்சி மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தபட வேண்டும். புகார் அளிக்க தனி புகார் எண் அறிவித்து புகார்தாரரின் ரகசியம் காக்கப்பட வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.












Click it and Unblock the Notifications