தனிஷ்க் கொள்ளை.. கைதான மீனாட்சியின் தாய் யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க! கழுத்து முழுக்க தங்கம்?
மதுரை: மதுரை பைபாஸ் சாலையில் உள்ள தனிஷ்க் நகைக்கடையில் சுமார் 11 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு, நாளுக்கு நாள் புதிய திருப்பங்களையும் சர்ச்சைகளையும் சந்தித்து வருகிறது. இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான யூடியூபர் நிஷாந்தைப் பிடிக்க 9 தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வரும் நிலையில், ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள இன்ஸ்டாகிராம் பிரபலம் மீனாட்சி மற்றும் நிஷாந்தின் தந்தை சுரேஷ் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இப்போது இந்த விவகாரத்தில் அடுத்த அதிர்ச்சியாக, கைதான இன்ஸ்டாகிராம் பிரபலம் மீனாட்சியின் தாயார் இந்துவும் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகி வருகிறார். மகளைப் போலவே தாயாரும் ஒரு சமூக வலைத்தளப் பிரபலம் என்பதும், அவரது பழைய வீடியோக்கள் மற்றும் பதிவுகள் பல சர்ச்சைகளைக் கிளப்பியவை என்பதும் இப்போது இணையவாசிகளால் தோண்டி எடுக்கப்பட்டு வருகிறது.

யார் இந்த 'இந்துவின் பயணம்'?
கைதான மீனாட்சியின் தாயார் இந்து, இன்ஸ்டாகிராமில் indhuvin_payanam என்ற பெயரில் சொந்தமாக ஒரு பக்கத்தை நடத்தி வருகிறார். மகளைப் போலவே இவரும் தொடர்ந்து ரீல்ஸ் மற்றும் வீடியோக்களைப் பதிவிட்டு, சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வந்துள்ளார். மீனாட்சி கைது செய்யப்பட்ட செய்தி வெளியான உடனேயே, அவரது குடும்பப் பின்னணியைத் தேடத் தொடங்கிய நெட்டிசன்கள், தாயார் இந்துவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தைக் கண்டறிந்துள்ளனர்.
ஆவின் பால் விற்பனையைச் சரித்த அந்த ஒரு வீடியோ
இந்துவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆய்வு செய்தவர்களுக்குப் பெரும் ஆச்சரியம் காத்திருந்தது. ஏற்கனவே தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு சர்ச்சை வீடியோவின் பின்னணியில் இருந்தவர் இவர்தான் என்பது தெரியவந்துள்ளது.
தமிழக அரசின் ஆவின் பாலில் மருந்து வாடை வீசுவதாகக் கூறி, முதன்முதலில் வீடியோ வெளியிட்டுப் புகார் கிளப்பியவர் இந்துதான். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போலப் பரவி, சுமார் 3.2 மில்லியனுக்கும் (32 லட்சம்) அதிகமான பார்வைகளைக் கடந்து வைரலானது. அந்த ஒரு வீடியோ ஏற்படுத்திய அச்சம் காரணமாக, பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்து ஆவின் பால் விற்பனை கடுமையாகச் சரிந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது பலராலும் விமர்சிக்கப்பட்ட அந்த வீடியோவை வெளியிட்டவர், இப்போது நகைக்கடை கொள்ளையில் கைதான மீனாட்சியின் தாயார் என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நகைக்கடை விளம்பரங்களும், தங்க நகை ரீல்ஸ்களும்
ஆவின் பால் சர்ச்சை மட்டுமின்றி, இந்துவின் பக்கத்தில் உள்ள மற்ற வீடியோக்களும் இப்போது சந்தேகக் கண்களோடு பார்க்கப்படுகின்றன. குறிப்பாக, பல்வேறு நகைக்கடைகளுக்கு முன்பு நின்று கொண்டு, உடலில் ஏராளமான தங்க நகைகளை அணிந்தபடி அவர் பதிவிட்டுள்ள வீடியோக்களை நெட்டிசன்கள் அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர்.
மகள் மீனாட்சி ஒரு மெகா நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதாகிச் சிறையில் இருக்கும் சூழலில், தாயார் நகைக்கடை விளம்பரங்கள் செய்ததும், அதிகப்படியான நகைகளுடன் ரீல்ஸ் போட்டதும் இப்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது.

தாயாரையும் விசாரிக்கக் கோரும் நெட்டிசன்கள்
சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோக்கள் வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் காவல்துறைக்குப் புதிய கோரிக்கை ஒன்றை முன்வைத்து வருகின்றனர். "மகள் மீனாட்சிக்கு நகைக்கடை கொள்ளையில் தொடர்பு இருப்பது உறுதியாகிவிட்டது. கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் எங்கே மறைத்து வைக்கப்பட்டன என்பதும் மீனாட்சிக்குத் தெரிந்திருந்தது. இந்த நிலையில், அவரது தாயார் இந்துவிற்கும் இந்த விவகாரம் குறித்து ஏதேனும் தெரிந்திருக்குமா? அல்லது மீதமுள்ள நகைகளைப் பதுக்கி வைப்பதில் குடும்பத்தினருக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா?" என இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும், ஆவின் பால் குறித்துத் தவறான அல்லது பரபரப்பான வீடியோ வெளியிட்டு விற்பனையைச் சரித்த விவகாரம் உட்பட, இந்துவின் பின்னணி குறித்தும், இந்தக் கொள்ளை வழக்கில் அவருக்கு ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்த வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
தீவிரமடையும் போலீஸ் விசாரணை
மறுபுறம், மதுரை மாநகர காவல்துறை தனது விசாரணையை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. மீனாட்சி கொடுத்த தகவலின் அடிப்படையில் மாடக்குளம் கண்மாய் பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 5 முதல் 6 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் ஏற்கனவே மீட்கப்பட்டுள்ளன.
இன்னும் சுமார் 5 கிலோ நகைகள் மீட்கப்பட வேண்டியுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள முக்கியக் குற்றவாளி நிஷாந்தைப் பிடிக்க 9 தனிப்படைகள் இரவு பகலாகத் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றன. நிஷாந்த் பிடிபட்டால் மட்டுமே, இந்தக் கொள்ளையில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்ற முழு உண்மையும் வெளிச்சத்திற்கு வரும்.


Click it and Unblock the Notifications
