16 மாதங்கள் ஆகுமாம்.. மதுரை டைடல் பார்க் பணிகள் எப்போது நிறைவடையும்? சோகத்தில் இளைஞர்கள்!
மதுரை: மதுரையில் கட்டப்பட்டு வரும் டைடல் பார்க் பணிகள் 16 மாதங்களில் நிறைவடையும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் மதுரையில் டைடல் பார்க்-க்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டிய நிலையில், கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனால் 2027ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்த பணிகள் நிறைவடையும் என்று கருதப்படுகிறது.
மதுரையின் மிகப்பெரிய கனவுகளில் ஒன்று டைடல் பார்க். 2023ஆம் ஆண்டு அதற்கான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். அதையடுத்து நிலம் கையகப்படுத்தப்பட்டு, சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்ட பணிகள் தொடங்கப்பட்டன. இதன்பின் டெண்டர் பணிகள் நடந்து, கடந்த பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. மொத்தமாக 5.34 லட்சம் சதுர அடியில் தரைதளம் மற்றும் 12 தளங்களுடன் கட்டப்பட்டு வருகிறது.

இதன் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வட இந்திய தொழிலாளர்கள் அதிகமானோர் கட்டுமான பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தரைதளம் கட்டி முடிக்கப்பட்டு, அடுத்தடுத்த பணிகள் நடந்து வருகின்றன. கட்டுமான பணிகள் தொடங்கப்பட்ட போது 18 மாதங்களில் கட்டி முடித்து 2026 ஜூன் மாதம் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டிருந்தது.
இதன் கட்டுமான பணிகள் நிறைவடைந்தால், இந்தியாவில் உள்ள முதன்மை நிறுவனங்கள் மதுரையில் தங்களின் அலுவலகங்களையும், முதலீடுகளையும் செய்ய தொடங்கும் என்று கருதப்படுகிறது. இதன் மூலமாக சுமார் 5 ஆயிரம் இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் கோவைக்கு பின் மதுரை முக்கிய மாவட்டங்களில் ஒன்றாக மாறும்.
இந்த நிலையில் மதுரை டைடல் பார்க் கட்டுமான பணிகள் எப்போது நிறைவடையும் என்று ஆர்டிஐ மூலமாக கேட்கப்பட்டது. அதற்கு இன்னும் 16 மாதங்களில் கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் என்று பதில் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மதுரை டைடல் பார்க் 2027ஆம் ஆண்டில் திறக்கப்படும் என்று புரிந்து கொள்ளப்படுகிறது.
இது மதுரை இளைஞர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே மதுரையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் மதுரைக்கு வெறும் 4 சதவிகித முதலீடுகள் மட்டுமே வந்தது. மீதமுள்ள முதலீடுகள் சென்னை, காஞ்சிபுரம், கடலூர், தூத்துக்குடி, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்றது. இதனால் டைடல் பார்க் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications