அழகிரி பிறந்தநாள்... போஸ்டரில் மாஸ் காட்டும் ஆதரவாளர்கள் - கண்கள் பனிக்க இதயங்கள் இணையுமா?
அழகிரி பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் அவரது ஆதரவாளர்கள் போஸ்டரில் மாஸ் காட்ட ஆரம்பித்து விட்டனர்.
மதுரை: மு.க அழகிரி பிறந்தநாளுக்கு ஆண்டு தோறும் ஒரு வாரத்திற்கு முன்பாகவே போஸ்டர்கள் ஒட்டி விடுவார்கள் அவரது ஆதரவாளர்கள். இந்த ஆண்டு ஒரே ரத்தம் ஒதுங்கிப்போவதில்லை என்று கூறி முதல்வர் மு.க ஸ்டாலினுடன் அழகிரியை போஸ்டரில் இணைத்துள்ளனர் அவரது ஆதரவாளர்கள்.
அலை அடித்து அலைகள் விலகுவதில்லை... அப்படித்தான் முன்னாள் முதல்வர் கருணாநிதி குடும்பத்தில் ஏற்படும் சகோதர சண்டையும். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாகவே கட்சியை விட்டு விலக்கி வைக்கப்பட்டிருக்கிறார் அழகிரி. அவர் மீண்டும் திமுகவில் இணைய வேண்டும் என்று விரும்பத் தொடங்கி விட்டனர் அவரது ஆதரவாளர்கள். அதனை வெளிப்படுத்தும் வகையில் இப்போது மதுரை நகரங்களில் போஸ்டராக ஒட்டி வருகின்றனர்.
மதுரை என்றாலே மாஸ்தான். நடிகர் நடிகையர் பிறந்தநாளோ, அரசியல் தலைவர்கள் பிறந்தநாளோ, போஸ்டரில் மாஸ் காட்டி ஒட்டுமொத்த தமிழகத்தையே அதிரவைத்து விடுவார்கள். மு.க அழகிரியின் பிறந்தநாள் வரும் ஜனவரி 30 கொண்டாடப்பட உள்ள நிலையில் மதுரை, திண்டுக்கல் நகரங்களில் அவரது ஆதரவாளர்கள் பல்வேறு வாசகங்களோடு போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.

தென்மண்டல அமைப்புச் செயலாளர்
மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகனான மு.க.அழகிரி, திமுக தென்மண்டல அமைப்புச் செயலாளராக பொறுப்பு வகித்தார். மதுரை தொகுதி எம்பியாக வெற்றி பெற்று மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தார் அழகிரி. அவரது ஆதரவாளர்கள் பலர் எம்எல்ஏக்களாக வெற்றி பெற்றனர். தென் மாவட்டங்களில் பவர்புல்லாக இருந்த அழகிரி திருமங்கலம் இடைத்தேர்தலின் போது புது பார்முலாவை அறிமுகம் செய்து வெற்றி பெற்றார்.

குடும்ப சண்டை
கடந்த 2014ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது திமுகவுக்கு எதிராகவும் ஸ்டாலினுக்கு எதிராகவும் கருத்துக்கள் தெரிவித்ததாக கூறி, அவ கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். கட்சியில் இருந்து நீக்கிய நாள் முதலே ஸ்டாலினுக்கு எதிராக பல கருத்துக்களை கூறிய அழகிரி, 2016 சட்டசபைத் தேர்தலின் போது திமுகவிற்கு எதிராகவே செயல்பட்டார். குடும்பத்தினர் பேச்சுவார்த்தை நடத்தியும் இரண்டு தரப்பினரும் சமாதானம் அடையவில்லை.

போஸ்டர்கள் மூலம் கவனம்
முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவுக்குப் பிறகு ஸ்டாலின் கட்சித் தலைமை பொறுப்பேற்றதற்கும் மு.க.அழகிரி எதிர்ப்பு தெரிவித்தார். மு.க.அழகிரி ஆதரவாளர்கள் பலர் அவரிடம் இருந்து ஸ்டாலின் பக்கம் சென்றனர்.
ஆண்டு தோறும் தனது பிறந்தநாளை ஆதரவாளர்களுடன் கொண்டாடுவார் அழகிரி. ஒவ்வொரு ஆண்டும் பிறந்தநாளின் போது பல வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டி பலரது கவனத்தையும் ஈர்ப்பார்கள் அவரது ஆதரவாளர்கள். போஸ்டர் மூலம் தங்களின் எண்ணங்களை வெளிப்படுத்துவார்கள்.

சைலண்ட் ஆன அழகிரி
உங்களை வெல்ல யாரும் இல்லை.. நீங்களே தலைவரின் செல்ல பிள்ளை. கம்பீரமே, செயல் வீரரே என்றெல்லாம் கடந்த காலங்களில் ஒட்டி அசத்தினர். சேர்த்துக்கிட்டா உதயம் இல்லாவிட்டால் அஸ்தமனம் என்றெல்லாம் கடந்த ஆண்டு போஸ்டர் ஒட்டினர். தனிக்கட்சி தொடங்குவார் என்று பேச்சு அடிபட்டது. ஆனாலும் சட்டசபை தேர்தலின் போது அவர் திமுகவுக்கும், ஸ்டாலினுக்கும் எதிராகவும் செயல்படாமல் மவுனமாக இருந்தார்.

வாழ்த்திய அழகிரி
திமுக வெற்றி பெற்று ஸ்டாலின் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற போது 'என் தம்பி முதல்வராவதில் எனக்குப் பெருமை' என நெகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்தார் அழகிரி. தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற போது அந்த விழாவில் மு.க.அழகிரி மகனும், மகளும் கலந்து கொண்டனர். சமீபத்தில் திருமண நாள் விழாவில் பங்கேற்று பேசிய முதல்வர் ஸ்டாலின் தனது அண்ணன் அழகிரியைப் பற்றியும் குறிப்பிட்டு பேசினார்.

ஒரே ரத்தம்
இந்த நிலையில் இந்த ஆண்டு அழகிரியின் 71வது பிறந்தநாள் ஞாயிறன்று கொண்டாடப்பட உள்ளது. மதுரை நகரம் முழுவதும் போஸ்டர்கள் பிரம்மாண்டமாக ஒட்டப்பட்டுள்ளன. ஒரு போஸ்டரில் முதல்வர் ஸ்டாலினும், மு. க. அழகிரியும் இணைந்து இருப்பது போல படங்களை ஒட்டி "ஒரே ரத்தம் ஒதுங்கி போவதும் இல்லை, நீ ஆற்றிய பணி மறந்து போவதும் இல்லை அண்ணா"என்ற வாசங்களோடு சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.

இணைந்த வாரிசுகள்
அண்ணன், தம்பியான முதலமைச்சர் மு. க. ஸ்டாலினும், அழகிரியும் இணைய வேண்டும் என அழகிரியின் ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். உதயநிதி ஸ்டாலின் மற்றும் தயாநிதி அழகிரி ஆகியோர் படங்களும் இடம்பெற்றுள்ளன. மதுரை மட்டுமல்லாது திண்டுக்கல் நகர திமுகவினரும் அழகிரியின் பிறந்தநாளுக்கு முதல்வரின் படத்தோடு போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

வாலியின் வரிகளில் வாழ்த்து
கவிஞர் வாலி ஒருமுறை அழகிரியை வாழ்த்தி கவிதை எழுதியிருந்தார். அந்த வரிகளை எடுத்து பிறந்தநாள் போஸ்டரிலும் சுவரொட்டிகளிலும் எழுதி வாழ்த்தியுள்ளனர் ஆதரவாளர்கள்.
அஞ்சா நெஞ்சன் ஓர் அன்பு பழகிரி.
ஈரம் நிறைந்திருக்கும் நீலகிரி.
தெற்கில் உதித்திருக்கும் அருணகிரி
அழகிரி அறியாத சொல் ஆங்கிரி (கோபம்)
கழகத்தின் முகவரி
என்று எழுதி அசத்தியுள்ளனர் ஆதரவாளர்கள். இதில் கருணாநிதி, அழகிரி, ஸ்டாலின், உதயநிதி, தயாநிதி அழகிரி ஆகியோரின் படங்களும் இணைந்துள்ளனர். அழகிரி ஆதரவாளர் மன்னன் படமும் வரையப்பட்டுள்ளது.

இணையுமா கைகள்
அழகிரி பிறந்தநாளில் கரகாட்டம், ஒயிலாட்டம், முளைப்பாரி ஊர்வலம் களைகட்டும். இந்த ஆண்டு திமுக ஆட்சியில் இருப்பதால் கொண்டாட்டங்களுக்கு குறைவிருக்காது. மு.க அழகிரியும் மு.க. ஸ்டாலினும் இணைய வேண்டும் என்று பல ஆண்டு காலமாகவே உறவினர்கள் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். வாரிசுகள் இடையே சமாதானம் ஆகி விட்டது என்றாலும் அண்ணன் தம்பிகள் இதுவரை நேரடியாக பேசவில்லை. இந்த பிறந்தநாளுக்கு ஸ்டாலின் வாழ்த்து சொல்வாரா? கண்கள் பனிக்க இதயம் இனிக்க வேண்டும் என்று மு.க அழகிரியின் ஆதரவாளர்கள் மட்டுமல்ல திமுகவினர் பலரும் விரும்புகின்றனர். கைகள் இணையுமா பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications