எவ்வளவு ’துணிவு’ உங்களுக்கு.. வாரிசு ரேஸால் ஓனர்களுக்கு சிக்கல்! 34 தியேட்டர்களுக்கு பறந்த நோட்டீஸ்!
மதுரை : தமிழக அரசின் எச்சரிக்கையை மீறி வாரிசு, துணிவு பட நள்ளிரவு சிறப்புக் காட்சிகளை அனுமதியின்றி வெளியிட்ட புகாரில் மதுரை மாவட்டத்திலுள்ள 34 திரையரங்குகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் திரை உலகில் அதிக ரசிகர்கள் குறிப்பாக இளைஞர் பட்டாளத்தை கொண்டுள்ள விஜய் ம்ற்றும் அஜித் நடித்துள்ள வாரிசு மற்றும் துணிவு படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி இருக்கிறது.
படம் தொடர்பான அறிவிப்பு வெளியான நிலையில் இருந்தே இருதரப்பு ரசிகர்களும் சமூக வலைதளங்களில் நேரில் கூட மோதிக் கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்த நிலையில், படம் வெளியான பிறகு யார் படம் ஹிட் என மோதல் எகிறியுள்ளது.

வாரிசு - துணிவு
இரு படங்களுமே வெற்றி பெற்றுள்ளது.. இரண்டுமே நன்றாக உள்ளது என பொதுவான ரசிகர்கள் சொல்லி வந்தாலும் வழக்கம் போல விஜய் அஜித் ரசிகர்கள் மோதல் போக்கை கையாண்டு வருகின்றனர். ஆரம்பத்தில் துணிவு படம் பெரிய அளவில் வசூலை ஈட்டியதாக அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வந்தனர் அதற்குப் பிறகாக வாரிசு படம் பொங்கல் ரேசில் வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது படக்குழுவினர் 200 கோடி ரூபாய்க்கு மேல் வாரிசு படம் வசூலித்ததாக கூறி வரும் நிலையில் அதனையும் அஜித் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

சிறப்பு காட்சி
படம் வெளியாவதற்கு முன்னதாக துணிவு மற்றும் வாரிசு படங்களுக்கு பொங்கல் காட்சிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு சுற்றறிக்கை அனுப்பியது. அதன்படி பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக அதாவது 13, 14, 15, 16 ஆகிய தேதிகளில் அதிகாலை 4 மணி மற்றும் 5 மணி சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்படுவதாகவும் திரையரங்க வளாகங்களில் உயரமான பேனர்களுக்கு ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்ய தடை விதிக்கப்பட்டது.

விதிமீறல்
மேலும் பார்க்கிங் மற்றும் டிக்கெட் கட்டணம் அதிகப்படியாக விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டு இருந்தது அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்களும் திரையரங்க உரிமையாளர்களும் அதிர்ச்சி அடைந்த நிலையில் பல இடங்களில் தடையை மீறி சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டதாக புகார் எழுந்தது. மேலும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை எழுந்தது.

தியேட்டர்களுக்கு நோட்டீஸ்
இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு துணிவு வாரிசு படங்களுக்கு சிறப்பு காட்சிகள் வெளியிட்ட தியேட்டர்களுக்கு சிக்கல் முளைத்திருக்கிறது. எச்சரிக்கையை மீறி நள்ளிரவு சிறப்பு காட்சிகளை வெளியிட்டதாக 34 திரையரங்குகளுக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். அதில் தமிழக அரசு அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர்த்து பதினோராம் தேதி நள்ளிரவு மற்றும் அதிகாலை 4 மணிக்கு துணிவு மற்றும் வாரிசு படங்கள் திரையிடப்பட்டிருக்கிறது.

ஓனர்கள் அதிர்ச்சி
தமிழ்நாடு திரையரங்குகள் ஒழுங்குமுறை சட்டம் 1957 இன் படி ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது எனவும் இந்த விளக்க நோட்டீஸ் கிடைத்த 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கவில்லை என்றால் திரையரங்கு ஒழுங்குமுறை சட்டம் 1957 இன் படி திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால் தியேட்டர் அதிபர்கள் கடும் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். இது மட்டுமல்லாமல் இந்த வழிமுறையை பின்பற்றி தமிழகம் முழுவதும் உள்ள தியேட்டர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதனால் படக்குழுவினரும் அதிருப்தி அடைந்திருக்கின்றனர். தற்போது வரை இரு படங்களும் வெற்றிகரமாக ஓடி வருவதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications