‘பரோல்’ என்பதே தமிழ்நாட்டில் கிடையாது.. அந்த வார்த்தையையே யாரும் பயன்படுத்த கூடாது! ஐகோர்ட் அதிரடி!
மதுரை: பரோல் அடிப்படையில் விடுமுறை வேண்டும் என யாருமே கோரிக்கை வைக்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிறை தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் கைதிகளை, தற்காலிகமாக உரிய காரணத்தின் அடிப்படையில் சில காலம் விடுவித்தல் 'பரோல்’ எனப்படும். தண்டனைக் கைதிகள் தங்களுக்கு விடுமுறை வேண்டி விண்ணப்பிப்பார்கள். தீவிர நோய்வாய்ப்படுதலால் அவசர சிகிச்சை பெறுதல், தங்கள் குடும்ப உறுப்பினர் இறப்பு, திருமணம் உள்ளிட்ட காரணங்களுக்காக சாதாரண, அவசர கால விடுப்பு கோரி தண்டனை கைதிகள் சிறையில் விண்ணப்பிப்பார்கள்.

இந்த விடுப்புக்கு சிறை அதிகாரிகள் அனுமதி தருவார்கள். அந்த விடுப்பை சிறை அதிகாரி எப்போது வேண்டுமானாலும் மாற்றலாம். ஒருவேளை சிறை அதிகாரிகள், விடுமுறை தர மறுத்து விட்டால் விடுப்பு வழங்க கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வார்கள். நீதிமன்றம், மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள காரணங்களை ஆராய்ந்து மனிதாபிமான அடிப்படையில் பரோல் வழங்க உத்தரவிடும், அல்லது மறுக்கும்.
இந்நிலையில் மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி உள்ளிட்ட சிறைகளில் உள்ள தண்டனை கைதிகள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விடுப்பு கேட்டு பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் ஐகோர்ட் கிளையில் நீதிபதிகள் சுந்தர், சக்திவேல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், பரோல் என்ற சொல் தமிழ்நாட்டில் நீதிமன்ற நடைமுறையில் இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், சிறையில் உள்ள தண்டனை கைதிகள் தங்களுக்கு விடுப்பு கேட்கும்போது, பரோல் வழங்கி உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிடுகின்றனர். பரோல் என்ற வார்த்தையை அடிக்கடி மனுவில் குறிப்பிடுகின்றனர். ஆனால் உண்மையில் தமிழ்நாடு தண்டனை நிறுத்தி வைப்பு விதிகளின் படி பரோல் என்ற வார்த்தையும், பரோல் தொடர்புடைய விதிமுறைகளும் தமிழகத்தில் கடைபிடிக்கப் படவில்லை.
மற்ற மாநிலங்களில் உள்ள விதிகளில் தான் பரோல் என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. பரோலுக்கு என தனி வழிமுறைகள் உள்ளன. எனவே தமிழக தண்டனை நிறுத்திப்புச் சட்டத்தின் படி பரோல் என்ற வார்த்தை பயன்படுத்த கூடாது. தமிழகத்தில் தண்டனை கைதிகள், பரோல் வழங்க வேண்டும் என விடுமுறை கோர முடியாது. இது போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவது தவிர்க்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள தண்டனை நிறுத்தி வைப்பு சட்டத்தின்படி கைதிகளுக்கு சாதாரண விடுப்பு அல்லது அவசரகால விடுப்பு என்ற இரண்டு பதங்களே பயன்பாட்டில் உள்ளன. எனவே இனிவரும் காலங்களில் தண்டனை கைதிகள் மனு தாக்கல் செய்யும்போது பரோல் அடிப்படையில் விடுமுறை வேண்டும் எனக் கோரக்கூடாது என அறிவுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications