நெல்லை கவின் ஆணவக்கொலை: ஐபிஎஸ் அந்தஸ்தில் உள்ள அதிகாரியை கொண்டு விசாரிக்க வேண்டும்.. ஐகோர்ட்டில் மனு
மதுரை: நெல்லையில் காதல் விவகாரத்தில் மென்பொருள் பொறியாளர் கவின் ஆணவக்கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணையை நேரடியாக கண்காணிக்க வேணடும் என உயர் நீதிமன்ற கிளையில் முறையிடப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூக இளைஞரான மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ், கடந்த 27 ஆம் தேதி நெல்லை கேடிசி நகரில் காதல் விவகாரத்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் கவின் காதலித்ததாக கூறப்படும் பெண்ணின் சகோதரர் சுர்ஜித் என்பவரை பாளையங்கோட்டை போலீசார் கைது செய்தனர். அவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

சுர்ஜித்தின் பெற்றோர்களான தமிழ்நாடு சிறப்பு காவல்படை உதவி ஆய்வாளர்களான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். பின்னர் சரவணன் கைது செய்யப்பட்டார். அதன் பிறகே கவின் உடலை அவரது பெற்றோர் பெற்று தகனம் செய்தனர். கவினின் கொலை வழக்கானது, இப்போது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரிய கிளாட் அமர்வில், கவின் கொலை வழக்கு விசாரணையை உயர் நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என முறையீடு செய்யப்பட்டது. இது தொடர்பாக வழக்கறிஞர்கள் பினேகாஸ், செல்வகுமார் ஆகியோர் ஆஜராகி, "நெல்லையில் மென்பொறியாளர் கவின் செல்வகணேஷ் காதல் விவகாரத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
தற்போது கவின் கொலை வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். ஐபிஎஸ் அந்தஸ்தில் உள்ள அதிகாரியை கொண்டு விசாரிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அனைவரையும் வழக்கில் சேர்க்க வேண்டும். விசாரணையை முழுமையாக உயர் நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும்." என கோரிக்கை வைத்தனர். இதையடுத்து மனுதாரர்கள் கோரிக்கை தொடர்பாக மனு தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications