அதிமுக கூட்டணி விவகாரம்.. பலமுறை விளக்கமளித்தாலும் மீண்டும் மீண்டும் ஏன் கேட்கிறீங்க? சீறிய அன்புமணி
மதுரை: அதிமுக, பாமக இடையே தற்போது கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ள நிலையில் அதிமுக கூட்டணி தொடர்பாக மதுரையில் கேள்வி கேட்கப்பட்ட நிலையில், ‛‛மீண்டும் மீண்டும் ஏன் இந்த கேள்வியை கேட்கிறீங்க?'' என அன்புமணி ராமதாஸ் பதில் கேள்வி கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் செயல்பட்டு வந்தனர். இந்நிலையில் தான் கடந்த ஆண்டு ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்தது.
பொதுக்குழு மூலம் ஓ பன்னீர் செல்வம் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக செயல்பட்டு வருகிறார்.

அதிமுக-பாமக மோதல்
இந்நிலையில் தான் பாமகவின் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார். அப்போது, "அதிமுக நான்கு அணிகளாக உடைந்துள்ளது" என்றார். எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் தனித்தனியாக செயல்பட்டு வரும் நிலையில் அன்புமணி ராமதாஸ் இப்படி கூறினார். இதனை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக கண்டித்தார். இதுபற்றி ஜெயக்குமார் கூறுகையில், "அதிமுகவால்தான் அன்புமணி ராமதாசுக்கு எம்பி பதவி கிடைத்துள்ளது என்பதை மனதில் வைத்து பேசவேண்டும். அதிமுக தயவு இல்லையென்றால் பாமகவுக்கு தேர்தல் ஆணைய அங்கீகாரமே கிடைத்திருக்காது" என்றார்.

பாமக வழக்கறிஞர் பதிலடி
இந்த விஷயம் அதிமுக, பாமக இடையே வார்த்தை போராக வெடித்துள்ளது. இந்நிலையில் நேற்று பாமக வழக்கறிஞர் பாலு பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, "1996ல் வெறும் 4 எம்எல்ஏக்களுடன் அதிமுக பலவீனப்பட்டது. பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா பாமக அலுவலகத்திற்கு வந்து கூட்டணி பேசி 1999 தேர்தலை சந்தித்தார். அதிமுக விழும்போதெல்லாம் பாமக தோள்கொடுத்துள்ளது. இருப்பினும் அதிமுகவின் வெற்றிக்கு பா.ம.க.தான் காரணம் என எப்போதும் சொல்லிக்காட்டியதில்லை. பாமகவிற்கு இடம் ஒதுக்குவது குறித்து பேச ஜெயக்குமார் யார்?. நுனி மரத்தில் அமர்ந்துகொண்டு அடிமரத்தை வெட்டுவது போல ஜெயக்குமார் பேசி இருக்கிறார். அதிமுக வீழ்ந்தபோதெல்லாம் உயிர் கொடுத்த பாமகவை செயல்பாடுகளை எப்போதும் மறக்க கூடாது. பாமக பற்றிய ஜெயக்குமாரின் கருத்து குறித்து எடப்பாடி பழனிசாமிதான் விளக்க வேண்டும்" என சாடினார்.

தெளிவாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது
இந்நிலையில் மதுரையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாமக பற்றி கூறிய கருத்து பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அன்புமணி ராமதாஸ், ‛‛அதிமுகவின் ஜெயக்குமார் கருத்துக்களுக்கு கட்சியின் வழக்கறிஞரும், செய்தி தொடர்பாளருமான பாலு தெளிவாக விளக்கம் அளித்துள்ளார். அதற்கு மேல் நான் சொல்வது ஒன்றும் இல்லை. அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி கருத்து தெரிவித்தால் அதற்கு நான் பதிலளிக்கிறேன்'' என்றார்.

பலமுறை தெளிவுப்படுத்தி உள்ளேன்
இந்த வேளையில் தொடர்ந்து அதிமுக கூட்டணியில் தான் பாமக இருக்குமா? வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தான் பாமக இருக்குமா? என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு அன்புமணி ராமதாஸ், ‛‛இதற்கு பலமுறை நான் தெளிவுப்படுத்தி உள்ளேன். எத்தனையோ முறை தெளிவுப்படுத்தி உள்ளேன். மீண்டும் மீண்டும் என் இந்த கேள்வி கேட்கிறீர்கள் என தெரியவில்லை'' என அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

பாமகவின் நோக்கம் என்ன?
மேலும் அன்புமணி ராமதாஸ் கூறுகையில், ‛‛பாமகவின் நோக்கம் என்பது 2026 சட்டசபை தேர்தலில் எங்கள் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும். அந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பது தான். அதற்கேற்ப வியூகங்களை 2024 நாடாளுமன்ற தேர்தலில் அமைப்போம். அந்த முடிவும் தேர்தலுக்கு 6 மாதத்துக்கு முன்பு தான் எடுப்போம். இதில் அவசரம் எதுவும் இல்லை. கூட்டணிக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ளது. ஏன் கூட்டணி பற்றி அவ்வளவு பண்றீங்க?. முதலில் தேர்தல் அறிவிக்கட்டும். தற்போதைய சூழலில் வளர்ச்சி சார்ந்த பிரச்சனைகளை தீர்க்கவும், நீர்மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கவும், காலநிலை மாற்றத்தில் இருந்து தமிழ்நாடு, இந்தியாவை காக்க வேண்டும் என்ற நோக்கம் எங்களுக்கு உள்ளது. இதற்கேற்ப செயல்களில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். இதில் தான் எங்களின் கவனம் தற்போது உள்ளது'' என்றார்.












Click it and Unblock the Notifications