செல்லூர் ராஜூ வீட்டை முற்றுகையிட்ட சீர் மரபினர்! சாணியை கரைத்து ஊற்றி கண்டன முழக்கம்! என்ன பின்னணி?
மதுரை: மதுரையில் வரும் ஞாயிற்றுக்கிழமை அதிமுக மாநாடு நடைபெறவுள்ள நிலையில், அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வீட்டை முற்றுகையிட்டு சீர் மரபினர் அமைப்பினர் கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.
செல்லூர் ராஜூ உருவப்படத்தை கீழே போட்டு அதன் மீது சாணியை கரைத்து ஊற்றி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி மதுரைக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகள் சார்பில் மதுரை முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

இந்நிலையில் பசும்பொன் தேசியக்கழகம் சார்பில் இட ஒதுக்கீடு விவகாரத்தை மையப்படுத்தி போஸ்டர்கள் அச்சடித்து ஒட்டி கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளன. செல்லூர் ராஜூ வீட்டில் இல்லாத நேரம் பார்த்து அவர் வீட்டை சீர் மரபினர் அமைப்பினர் முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்ல வைத்தனர். எடப்பாடி பழனிசாமியை மதுரைக்கு அழைத்து வந்து மாநாடு நடத்துவதில் ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜூ ஆகிய இருவருக்கும் முக்கிய பங்கு இருப்பதால் அவர்கள் இருவர் மீது சமுதாய அமைப்புகள் சில கோபம் கொண்டுள்ளன.
இதனிடையே ஆர்.பி. உதயகுமாரும் சரி, செல்லூர் ராஜுவும் சரி இது போன்ற எதிர்ப்புகளை பெரிதாக கண்டுகொள்ளாமல் தங்களுக்குரிய மாநாட்டு பணிகளை முழுமூச்சாக கவனித்து வருகின்றனர். மாநாடுக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளதால் களம் இன்னும் பரபரப்பாக காணப்படுகிறது.
இது போன்ற எதிர்ப்புகள் கிளம்பும் என்பது தங்களுக்கு முன்கூட்டியே தெரியும் எனக் கூறுகிறது செல்லூர் ராஜூ தரப்பு. ஆனால் இதற்கெல்லாம் அசரும் ஆள் செல்லூர் ராஜூ கிடையாது எனவும் தெரிவிக்கிறது.












Click it and Unblock the Notifications