ஸ்டாலினின் பிரதமர் கனவு பலிக்காது.. 400 இடம் எங்களுக்கு வரும்.. அண்ணாமலை பேட்டி
மதுரை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் பிரதமராக வேண்டும் என கனவு கண்டு வருவதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மேலூர் அருகே வெள்ளலூர் நாட்டில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் கலந்துகொள்ள வந்த அண்ணாமலை மதுரை விமான நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். அப்போது அவர், "தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் வார்த்தை ஜாலம் மட்டுமே இருக்கிறது. அனைத்தும் பகல் கனவுதான். தமிழ்நாடு அரசின் கடன் சுமை ரூ.6 லட்சம் கோடியை கடந்து இருக்கிறது. இந்த கடனை தமிழ்நாடு மக்கள் மீது சுமத்தி உள்ளனர்.

அதிகம் கடன் வாங்கிய மாநிலம் தமிழ்நாடுதான்
இந்தியாவில் உள்ள மாநிலங்களிலேயே அதிகளவில் கடன் வாங்கி இருப்பது தமிழ்நாடுதான். தமிழ்நாடு அரசு ரூ.7,000 கோடி வருவாய் ஈட்டி கடனை குறைத்து உள்ளதாக கணக்கு காட்டுகிறது. ஒருவேளை அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அடுத்தடுத்த ஆண்டுகளில் ரூ.80,000 கோடி கடனை தமிழ்நாடு அரசு வாங்கும் நிலை வரும். அரசு கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை வரவேற்கிறோம். அதே நேரம், 36 மாதங்கள் 5 லட்சம் பேருக்கு இவ்வாறு வழங்க முடியுமா?

மத்திய அரசின் திட்டங்களுக்கு பெயர் சூட்டுகிறது தமிழ்நாடு அரசு
மத்திய அரசு தமிழ்நாடு அரசுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகையை முழுமையாக வழங்கிவிட்டது. எந்த மாநிலத்துக்கும் நிலுவைத் தொகையை மத்திய அரசு வழங்காமல் இருக்காது. தமிழ்நாடு அரசு எல்லாவற்றுக்கும் மத்திய அரசு மீது பழிசுமத்தி வருகிறது. பட்ஜெட்டில் மத்திய அரசின் திட்டங்களுக்கு புதிதாக பெயர் சூட்டி தங்களின் திட்டம் போல தமிழ்நாடு அரசு காட்டுகிறது.

ஆளுநரை சந்திக்கப்போகும் அண்ணாமலை
தமிழ்நாடு மின்வாரியம் - பிஜிஆர் நிறுவன ஊழல் தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை வருகிற திங்கள்கிழமை பாஜக சார்பில் சந்தித்து புகாரளிக்க இருக்கிறோம். தமிழ்நாடு அரசு தங்கள் கீழ் இருக்கும் ஊழல் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுத்து வித்தியாசத்தை காட்ட வேண்டும். ஊழலுக்கு எதிராக தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையை மக்களுக்கு தர வேண்டும்.

ஸ்டாலின், மம்தா, பினராயி விஜயனின் பிரதமர் கனவு பலிக்காது
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்ட பலர் இந்தியாவின் பிரதமராகிவிடலாம் என்ற கனவில் உள்ளனர். 2024 மக்களவைத் தேர்தலில் 400 எம்.பிக்களுடன் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்கும்." என்றார்.












Click it and Unblock the Notifications