அதிமுக கூட்டணியில் பிளவு? “தேர்தலுக்கு முன்பாக முடிவு செய்வோம்”.. பிரேமலதா விஜயகாந்த் சொன்ன வார்த்தை
மதுரை: 2026 சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி பற்றி இப்போதே ஜோசியம் சொல்ல முடியாது, தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. அப்போது கூட்டணி குறித்து உங்களுக்கு அறிவிப்போம் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பதில் அளித்தார்.
அதிமுகவிடம் ஒரு ராஜ்யசபா சீட்டை கேட்டு வருகிறது தேமுதிக. தேமுதிக கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொண்டது. அப்போது தேமுதிகவுக்கு 5 லோக்சபா தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா சீட்டும் வழங்கப்படும் என அதிமுகவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் தருவது குறித்து அதிமுக உறுதி அளித்து உள்ளதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறிய நிலையில், தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் தருவது தொடர்பாக எந்த ஒப்பந்தத்தையும் மேற்கொள்ளவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருந்தார்.
கடந்த மார்ச் 4 ஆம் தேதி சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் குறித்த கேள்விக்கு, "யார் சொன்னது? அதிமுக ஒரு சீட் தரும் என்று சொன்னதா? தேர்தல் உடன்படிக்கையை படித்துவிட்டு வந்து பேசுங்கள்" என்று பதிலளித்திருந்தார். இந்த விவகாரம் அதிமுக - தேமுதிக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நநிலையில் மதுரை விமான நிலையத்தில் பிரேமலதா விஜயகாந்த் இன்று (மார்ச் 9) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த பிரேமலதா, "அதிமுகவுக்கும் எங்களுக்கும் இடையே எந்த மன வருத்தமும் இல்லை. தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. அப்போது கூட்டணி குறித்து உங்களுக்கு அறிவிப்போம்." என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "தேர்தல் ஆலோசகரை நியமிப்பது ஒவ்வொரு கட்சியின் நிலைப்பாடு. தேர்தல் ஆலோசகர் வைத்திருப்பதால் மட்டுமே நூறு சதவீதம் வெற்றி பெற முடியாது. அது குறிப்பிட்ட கட்சியின் வியூகம். ஆனால் விஜயகாந்த் என்றைக்குமே மக்களை மட்டுமே நம்பினார்." எனத் தெரிவித்தார்.
2026ல் அதிமுக - பாஜக - தேமுதிக கூட்டணி அமையுமா என்ற கேள்விக்கு, "அதுகுறித்து இப்போதே ஜோசியம் சொல்ல முடியாது. அந்த காலம் வரும்போது அதுகுறித்து உங்களுக்கு தெரிவிக்கப்படும்" எனத் தெரிவித்தார் பிரேமலதா விஜயகாந்த்.
முன்னதாக, 2026 சட்டசபை தேர்தலிலும் அதிமுக உடனான கூட்டணி தொடரும் எனக் கூறி வந்தார் பிரேமலதா. ராஜ்யசபா சீட் தொடர்பான பிரச்சனையால் தற்போது பிரேமலதா பேச்சு திசைமாறியுள்ளது.
நேற்று அதிமுக கூட்டணி சார்பில் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு செய்வது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க மறுத்து அங்கிருந்து கிளம்பிச் சென்றார் பிரேமலதா. இதனால் பிரேமலதா கூட்டணி விவகாரத்தில் அதிரடி முடிவை எடுக்கப்போகிறாரா என்ற விவாதங்கள் எழுந்தன.












Click it and Unblock the Notifications