tvk madurai manadu: வாட் ப்ரோ! இட்ஸ் வெரி ராங் ப்ரோ! விஜய்க்கு வாய்ப்பூட்டு மட்டும் போடலை! மதுரை மாநாடு! கொதித்த தவெக!
சென்னை: தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நடைபெற இருக்கும் நிலையில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாநாட்டில் விஜய் பேசுவதற்கு காவல்துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாகவும், இது ஜனநாயகத்திற்கு எதிரானது என புகார் சொல்கின்றனர் தமிழக வெற்றிக் கழகத்தினர்.
2026 தேர்தலுக்கு தமிழ்நாடு தயாராகி வருகிறது. திமுக, அதிமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் மக்களை சந்திக்க சுற்றுப் பயணத்தை தொடங்கி இருக்கின்றனர். அந்த வகையில் தமிழக அரசியலில் புது வரவான விஜய் கள அரசியலுக்கு திரும்பி இருக்கிறார்.
கடந்த ஆண்டு கட்சியை ஆரம்பித்த நிலையில் ஒர்க் ப்ரம் ஹோம் அரசியல்வாதி என்ற பெயர் விஜய்க்கு கிடைத்தது. விஜய் செல்லும் இடமெல்லாம் கூட்டம் வரும் அதனால் மக்கள் பாதிப்படைவார்கள் என்ற காரணத்தை தமிழக வெற்றிக்காக நிர்வாகிகள் சொல்லி வந்தாலும் அரசியலுக்கு வந்து விட்டால் களத்திற்கு வந்தே ஆக வேண்டும் என்கின்றனர் மூத்த அரசியல் தலைவர்கள்.

விஜய்
இடை இடையே சில நிகழ்ச்சிகளிலும் ஆர்ப்பாட்டங்களிலும் விஜய் கலந்து கொண்டாலும் இன்னும் முழுமையாக அவர் களத்திற்கு வரவில்லையே என்ற ஏக்கம் அவர்களது தொண்டர்களுக்கு இருப்பது என்னவோ உண்மை தான். இந்த நிலையில் மண்டல வாரியாக மாநாடு, தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் என விஜய் அடுத்த கட்ட அரசியலுக்கு தயாராகி வருகிறார். அதற்கு முன்னோட்டமாக மதுரையில் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற இருக்கிறது.
தவெக மாநில மாநாடு
ஆகஸ்ட் 25ஆம் தேதி விஜயகாந்த் பிறந்தநாள் அன்று மாநாட்டை நடத்த திட்டமிட்டு இருந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி காரணமாக மாநாட்டை முன்னரே நடத்த வேண்டிய நிலை விஜய்க்கு ஏற்பட்டது. இதனை அடுத்து மாநாட்டு தேதி ஆகஸ்ட் 21ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டது. மாநாட்டுக்கு இன்னும் ஏறக்குறைய ஒரு வாரமே இருக்கும் நிலையில் மாநாட்டு பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. காவல்துறை தரப்பில் 40க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் விளக்கம் அளித்துள்ளனர். பின்னர் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் காவல் துறையும் அனுமதி அளித்திருக்கிறது.
தமிழக வெற்றிக் கழகம் மாநாடு
மதுரை மாநாட்டில் சுமார் ஒன்றரை லட்சம் ஆண்கள், 25 ஆயிரம் பெண்கள், 5000 மாற்றுத்திறனாளிகள், 2000 முதியவர்கள் கலந்து கொள்வார்கள் எனவும், மாநாட்டில் கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு அனுமதி இல்லை எனவும் காவல்துறையிடம் தமிழக வெற்றிக் கழகம் சொல்லி இருக்கிறது. இந்த நிலையில் சுமார் 500 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு அங்கு மாநாட்டுக்கான பணிகள் இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. பிரம்மாண்ட மேடை, 500 மீட்டர் நீளத்துக்கு நடைபாதை, 18 வழிகள் என தொண்டர்கள் சிரமம் இன்றி மாநாட்டுக்கு வந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
காவல்துறை அனுமதி
அதுமட்டுமில்லாமல் ஒரு லட்சம் இருக்கைகள் அமைக்கப்படும் எனவும் காவல்துறையிடம் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சொல்லி இருக்கின்றனர். அதே நேரத்தில் இதுவரை இல்லாத வகையில், பல்வேறு கட்டுப்பாடுகளை காவல்துறை விதித்துள்ளது என்கின்றனர் தமிழக வெற்றிக் கழகத்தினர். அதாவது மாநாட்டில் விஜய் மட்டுமே பேசுவார் என தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சொல்லப்பட்டிருக்கும் நிலையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசக்கூடாது, தலைவர்களை தனிப்பட்ட முறையில் விமர்சிக்க கூடாது, சாதி, சமயம், இன அடிப்படையில் பேசக்கூடாது, இரு பிரிவினருக்கு இடையே மோதலை தூண்டும் வகையில் பேசக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக சொல்கின்றனர்
கடும் கட்டுபாடுகள்
பொதுவாகவே அரசியல் கட்சிகளின் மாநாடு என்றால் இது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது சகஜம்தான். ஆனால் பிற கட்சிகள் மாநாடு நடத்தும் போது இதுபோன்று எந்தவித ஒரு அறிவுறுத்தலையும் வழங்காத காவல்துறை தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு மட்டும் ஏன் இவ்வளவு கெடுபிடி காட்டுகிறது என கேள்வி எழுப்புகின்றனர் மதுரை மாவட்ட நிர்வாகிகள். தற்போது மட்டுமல்ல மாநாட்டு வேலைகள் தொடங்கியதில் இருந்தே காவல்துறை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்திற்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.
தவெக தொண்டர்கள் அதிருப்தி
பேனர் வைக்கக்கூடாது, அலங்கார வளைவுகள் அமைக்க கூடாது என தினம் தினம் ஒரு அறிவுறுத்தலை வழங்கி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு இதே மதுரையில் தான் திமுகவின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போதெல்லாம் இதே அறிவுறுத்தல்களை காவல்துறை திமுகவுக்கு வழங்கியதா என கேள்வி எழுப்புகின்றனர். இன்னும் ஒரு வாரமே மாநாட்டுக்கு இருக்கும் நிலையில் தற்போதைக்கு அதனை வெற்றிகரமாக முடிப்பது மட்டும்தான் எங்கள் இலக்கு, பிறகு எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறோம் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications