மாநில அரசைக் கண்டு பயமா.. ரஷ்யா கண்ணில் விரலைவிட்டு ஆட்டுபவர் மோடி.. மதுரையில் அண்ணாமலை பேச்சு!
மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாப்பட்டி மற்றும் அதன் சுற்றியுள்ள 2,015 ஹெக்டேர் நிலத்தில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் கொண்டு வரவிருப்பதாக மத்திய அரசு அறிவித்தது. இதில் சுரங்கத்தை வெட்டி எடுப்பதற்காக டெண்டரை வேதாந்தாவின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் கைப்பற்றியது. இதற்கு எதிராக கடுமையான போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர்.
இதன்பின் மத்திய அரசு அரிட்டாப்பட்டியில் சுரங்கத் திட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் தரப்பில் தங்களுக்கு ஆதரவு கூறிய அரசியல் கட்சியினருக்கு நன்றி கூறி வருகின்றனர். அந்த வகையில் இன்று மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி மற்றும் பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் அரிட்டாபட்டிக்கு அழைத்து மக்கள் நன்றி கூறினர்.

அப்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில், சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் டங்ஸ்டன் எடுக்க போவதாக மத்திய அரசு கூறியது. அதனால் மக்கள் சங்கடப்பட்டனர். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி ஒருபோதும் மக்களுக்கு எதிரான திட்டத்தை கொண்டு வந்ததில்லை. டங்ஸ்டன் திட்டமும் கூட மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி உள்ளிட்டோருக்கு எப்படிப்பட்ட பகுதி என்பதே தெரியாது.
மத்திய அரசு எழுப்பிய கேள்விகளுக்கு, தமிழக அரசு தரப்பில் கோயில்கள் பற்றியோ, சமணர் படுகை பற்றியோ, விவசாய நிலங்கள் பற்றியோ குறிப்பிடவில்லை. இதன்பின்னர் தான் ஏலம் விடப்பட்டது. பின்னர் நவம்பரில் டெண்டர் எடுத்த பின் தான், அனைவரும் திரும்பி பார்க்கும் வகையில் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின் நாம் அவர்களை டெல்லிக்கு அழைத்து சென்று, மத்திய அமைச்சரை சந்திக்க வைத்தோம்.
இதன்பின் அங்கேயே அம்பலக்காரர்களுக்கு மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி உறுதி கொடுத்தார். மத்திய அரசு ஒரு திட்டத்தை ரத்து செய்வது எளிதான விஷயமல்ல. ஆனால் 24 மணி நேரத்தில் டங்ஸ்டன் திட்டத்தை முழுமையாக ரத்து செய்து அறிவிப்பு வெளியாகியது. அரிட்டாபட்டியில் மக்கள் நடத்திய போராட்டம் நியாயமானது.
சட்டசபையில் தீர்மானம் போட்டதால் இந்த திட்டம் ரத்து செய்யப்படவில்லை. வாரவாரம் சட்டசபையில் தீர்மானம் போடுவதே திமுகவின் வேலை. ஆனால் விவசாயிகளின் கண்ணீருக்காக மட்டுமே திட்டம் ரத்து செய்யப்பட்டது. மாநில அரசை கண்டெல்லாம் பயப்படவில்லை. உக்ரைன், ரஷ்யா நாடுகளின் கண்களில் விரலைவிட்டு ஆட்டிக் கொண்டிருக்கும் மோடி, மாநில அரசை கண்டா பயப்படுவார்.
இந்த மக்களின் அன்புக்காக மட்டுமே வந்துள்ளோம். இந்த பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பதே தமிழக அரசுக்கு நான் வைக்கும் கோரிக்கை. அந்த உரிமை மாநில அரசுக்கு மட்டுமே உள்ளது. இந்த மக்களின் தோழனாக நரேந்திர மோடி எப்போதும் இருப்பார் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications