"ஓபிஎஸ் என்னை கைவிட்டுவிட்டார்!" ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் முக்கிய தகவலை சொன்ன உசிலம்பட்டி ஐயப்பன்?
மதுரை: "எங்களை கரை சேர்ப்பார் என்று நம்பிய தலைவரே எங்களை கைவிட்டுவிட்டார்" என உசிலம்பட்டி எம்.எல்.ஏ ஐயப்பன், ஓ.பன்னீர்செல்வம் மீது பகிரங்கமாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருப்பதாக வரும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் அணியினராகச் செயல்பட்டபோது, சட்டசபையில் உசிலம்பட்டி ஐயப்பன் பேசிய பேச்சு அப்போது வைரலானது.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களைப் புகழ்ந்து தள்ளிய ஐயப்பன், "முதலமைச்சர் மு.க. ஸ்டாலினே மீண்டும் முதல்வராக வர வேண்டும், திமுக மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும்" என வாழ்த்தினார்.
தனது அரசியல் குருவான ஓபிஎஸ் வழிகாட்டுதலின் பேரிலேயே அவர் முதலமைச்சரை அப்படிக் கொண்டாடியதாக அப்போது பேசப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே, மதுரையில் நடந்த பிரம்மாண்ட 'தாய் கழகம் திரும்பும் விழா' மாநாட்டில் ஓபிஎஸ் உடன் இணைந்து ஐயப்பனும் திமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.
திமுகவில் இணைந்தபோது, தனக்கு மீண்டும் உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு (சீட்) பெற்றுத் தருவதாக ஓபிஎஸ் உறுதியளித்ததாக ஐயப்பன் கூறுகிறார்.
"ஐயாவை (ஓபிஎஸ்) நம்பித்தான் நாங்கள் வந்தோம். எங்களை வழிநடத்திச் செல்ல வேண்டிய கடமை அவருக்கு இருந்தது. ஆனால், தொகுதிப் பங்கீட்டில் உசிலம்பட்டி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டபோது, எங்களுக்காக அவர் வலுவாகப் பேசவில்லை" என்பது ஐயப்பனின் குற்றச்சாட்டாக உள்ளது.
இந்தத் தேர்தலில் திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு என்பது மிகக் கடினமான ஒன்றாக இருந்தது. ஓபிஎஸ் மகனும் முன்னாள் எம்பியுமான ரவீந்திரநாத்திற்கே சீட் கிடைக்காத நிலையில், ஐயப்பனுக்காக ஓபிஎஸ் எவ்வளவு தூரம் அழுத்தம் கொடுத்திருக்க முடியும் என்ற கேள்வியும் எழுகிறது.
உசிலம்பட்டி தொகுதியை காங்கிரஸ் கேட்டுப் பெற்றதால், திமுகவால் அங்கு தனது புதிய வரவான ஐயப்பனை நிறுத்த முடியாமல் போனது. தனது ஆதரவாளர்களை அழைத்து ஆலோசனை நடத்திய ஐயப்பன், ஓபிஎஸ் மீதுள்ள கோபத்தை வெளிப்படுத்தினாலும், கண்ணியத்துடன் ஒரு முடிவை எடுத்துள்ளார்.
"நமக்குச் சீட் கிடைக்கவில்லை என்றாலும், கூட்டணியின் வெற்றிக்காக உழைக்க வேண்டும். உசிலம்பட்டியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரின் வெற்றிக்காகப் பாடுபடுங்கள்" எனத் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இருப்பினும், "முதல்வரைப் புகழ்ந்து பேசி, கட்சியில் இணைந்து, கடைசியில் வெறும் கையோடு நிற்கிறோமே" என்கிற வருத்தம் ஐயப்பன் ஆதரவாளர்கள் மத்தியில் தணியாமல் உள்ளது. வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் ஓபிஎஸ்ஸை விட்டு விலகிய போது கூட தனக்கு, ஐயப்பனுக்கு, வெல்லமண்டி நடராஜனுக்கு, கொளத்தூர் கிருஷ்ணமூர்த்திக்கு கண்டிப்பாக சீட் கொடுக்கும் கட்சியுடன் கூட்டணி அமைப்பதில் ஓபிஎஸ் உறுதியாக இருந்ததாக சொல்லப்படுகிறது.
பின்னர் ஓபிஎஸ்ஸும், ஐயப்பனும் திமுகவில் இணைந்துவிட்ட நிலையில் வெல்லமண்டி நடராஜனும் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியும் அதிமுகவில் இணைந்துவிட்டனர். இந்த நிலையில் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், பழனியப்பன், தோப்பு வெங்கடாச்சலம், ஓபிஎஸ் உள்ளிட்டோர் சீட் பெற்ற நிலையில் ஐயப்பனுக்கு சீட் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் திமுகவில் இணைவதற்கு முன்பு அவர் தவெகவிற்கு செல்வதாக ஒரு வதந்தி பரவியது. அவரது காரை பனையூர் தவெக அலுவலகத்தில் பார்த்ததாக செய்திகளும் வந்தன. ஆனால் இவற்றை மறுத்த ஐயப்பன், "நான் தவெகவில் இணையவில்லை, அந்த அலுவலகத்திற்கும் செல்லவில்லை. ஓபிஎஸ் என்ன முடிவெடுக்கிறாரோ அதுதான் எனது முடிவும்" என சொல்லியிருந்தார்.


Click it and Unblock the Notifications
