வைகாசி விசாகம்..திருச்செந்தூர், பழனிக்கு சிறப்பு ரயில்களை இயக்க எம்.பி வெங்கடேசன் கடிதம்
வைகாசி விசாகத்தினை முன்னிட்டு மதுரையில் இருந்து பழனிக்கு சிறப்பு ரயில்களை இயக்கிட வேண்டும் என்று எம்.பி. சு. வெங்கடேசன் கோரிக்கை வைத்துள்ளார்.
மதுரை: வைகாசி விசாகத்திருவிழாவை முன்னிட்டு மதுரையில் இருந்து பழனி, திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் மதுரை தொகுதி எம்.பி சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் வைகாசி விசாகத்திருவிழா வரும் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். திருப்பரங்குன்றம், பழனி, திருச்செந்தூரில் பால்குடம் எடுத்தும் காவடிகள் சுமந்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்றும் பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி. தெற்கு இரயில்வே பொதுமேலாளரிடம் எழுதியுள்ள கடிதத்தில், வரும் 12 .6 .22 அன்று வைகாசி விசாகத் திருவிழா நடைபெற உள்ளது.
அன்றைய தினம் திருச்செந்தூர், பழனி ஆகிய முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு ஆண்டுதோறும் நடைபெறுகின்றது. ஏராளமான பக்தர்கள் பயணம் செய்வார்கள். அன்றாட பயணி வண்டிகளில் கோடைகாலம் ஆதலால் இடம் போதாது. எனவே சிறப்பு ரயில்களை ஒரு வாரம்
இயக்கிட பொது மேலாளருக்கு கடிதம் எழுதி உள்ளேன்.
மதுரையிலிருந்து திண்டுக்கல் வழியாக பழனிக்கு சிறப்பு ரயில்; பழனியில் இருந்து திருச்செந்தூருக்கு திண்டுக்கல் திருநெல்வேலி வழியாக சிறப்பு ரயில்;செங்கோட்டையிலிருந்து திருச்செந்தூருக்கு திருநெல்வேலி வழியாக சிறப்பு ரயில் ; செங்கோட்டை திருநெல்வேலி பயணி வண்டியை நீட்டித்து இயக்கிட வேண்டும்.
செங்கோட்டையிலிருந்து பழனிக்கு மதுரை வழியாக பயணி சிறப்பு ரயில் இயக்க வேண்டும் ; செங்கோட்டை மதுரை பயணி வண்டியை நீட்டிப்பு செய்து இதனை இயக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications