வேத மந்திரங்கள் முழங்க.. அதிமுக மாநாடுக்கு முகூர்த்தக் கால் நடும் விழா! இன்னும் 42 நாட்கள் மட்டுமே!
மதுரை: மதுரையில் வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுகவின் எழுச்சி மாநாட்டுக்கான முகூர்த்தக்கால் நடும் விழா இன்று காலை நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க அதிகாலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாநாட்டு குழு பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் பங்கேற்க வேண்டி நேற்றிரவே தமிழகம் முழுவதும் இருந்தும் அதிமுக முக்கியப் பிரமுகர்கள் பலரும் மதுரைக்கு வந்துவிட்டனர். முகூர்த்தக் கால் நடும் நிகழ்வில் பங்கேற்ற முக்கிய பிரமுகர்களுக்கு மதுரை மாவட்ட ஒருங்கிணைந்த அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், சட்டமன்ற உறுப்பினர் ராஜ்ன் செல்லப்பா ஆகியோர் பட்டுத் துண்டு போர்த்தி மாலை அணிவித்து கவுரவித்தனர்.

அதிமுக மாநாட்டு பணிகளில் ஆர்.பி. உதயகுமார் ஆர்வம் காட்டவில்லை எனக் கூறப்பட்ட நிலையில், இன்றைய தினம் அனைத்துப் பணிகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு கவனித்தார். அதேபோல் செல்லூர் ராஜூவும் தனது பங்குக்கு முகூர்த்தக் கால் நடும் விழா ஏற்பாடுகளை உற்சாகமாக கவனித்தார்.
அதிமுக மாநாட்டு ஒருங்கிணைப்பு குழுவில் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன்,செங்கோட்டையன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, தனபால் ஆகியோர் இடம்பெற்றிருக்கின்றனர். இதேபோல் அதிமுக மாநாடு விழா மலர் குழுவில், வைகைச் செல்வன், தளவாய்சுந்தரம், வேணுகோபால், சண்முகநாதன், சரோஜா, இன்பத்துரை, ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
மாநாட்டின் முக்கிய நிகழ்வாக கருதப்படும் பந்தல் குழுவில், செல்லூர் ராஜூ, உதயகுமார், கருப்பசாமி பாண்டியன், ராஜன் செல்லப்பா, ரத்தினவேல், சிவபதி, ஆகியோரும் மாநாடு விளம்பரம் மற்றும் செய்தித் தொடர்புக் குழுவில் விஜயபாஸ்கர், கோகுல இந்திரா, கடம்பூர் ராஜூ, ராஜேந்திரபாலாஜி, ராஜ் சத்யன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அதிமுக மாநாடுக்கு இன்னும் 42 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பந்தல், மேடை அமைக்கும் பணிகள் ஆர்ட் டைரக்டர் ஒருவர் மேற்பார்வையில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications