மதுரை குலுங்க குலுங்க.. ஆகஸ்ட் 25ல் காத்திருக்கும் ஆச்சர்யம்! 2வது மாநாட்டில் விஜயின் பக்கா ப்ளான்!
மதுரை: 2026 சட்டமன்ற தேர்தல் களம் தற்போது சூடு பிடித்துள்ளது. தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகள் தீவிரமாக காய்களை நகர்த்தி வருகின்றன. அந்த வகையில் தமிழக அரசுகளின் புதுவரவான விஜய், தனது தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டை மதுரையில் பிரம்மாண்டமாக நடத்த இருக்கிறார். மாநாட்டுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் மாநாட்டு வேலைகள் சூடு பிடித்துள்ளன.
2026 தேர்தல் கடந்த தேர்தல்களைப் போல அவ்வளவு சுலபமாக இருக்காது என்பதுதான் அரசியல் நிபுணர்களின் பார்வையாக இருக்கிறது. காரணம், ஆளுங்கட்சி என்ற பலத்தோடு திமுக மிகப்பெரிய கூட்டணியோடு தேர்தலை சந்திக்கிறது. இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்க தீவிரமாக காய் நகர்த்தி வருகிறார் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்.
மறுபுறம் இதுவரை அதிமுக இரண்டு சட்டமன்ற தேர்தல்களில் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்ததில்லை என்ற பெருமையை தக்க வைக்கவும், தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் 2026 தேர்தலில் வெற்றி பெற்றே தீருவேன் என தீர்மானமாக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

இதற்காக கடந்த காலங்களில் கடுமையாக விமர்சித்த பாஜகவுடன் மீண்டும் கூட்டணி சேர்ந்திருக்கிறார்.மேலும் பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளையும் கூட்டணிக்கு வர வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பாமகவை பொறுத்தவரை உட்கட்சி மோதலால் சிக்கித் தவிக்கிறது. தேமுதிக மாநிலங்களவை உறுப்பினர் சீட்டு விவகாரம் தொடர்பாக அதிருப்தியில் இருந்த நிலையில் திடீரென முதலமைச்சர் ஸ்டாலினை பிரேமலதா சந்தித்து பேசியது அரசியல் பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
எடப்பாடி பழனிச்சாமியின் எதிரியான ஒ.பன்னீர்செல்வமும் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து பேசி இருக்கிறார். இது ஒரு புறம் இருக்க தமிழக அரசியலில் புதிய வரவான தமிழக வெற்றிக்கழகத்தின் நகர்வுகளும் கவனிக்க வைத்துள்ளது. முதல் மாநாட்டிலேயே மாஸ் காட்டிய விஜய் அடுத்தடுத்து பல நிகழ்வுகளில் அரசியலில் மைய புள்ளியாக மாறி இருக்கிறார். வரும் தேர்தலில் மூன்றாவது மிகப் பெரிய கட்சியாக தமிழக வெற்றி கழகம் உருவெடுக்க வேண்டும் என தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதனால் வட மாவட்டங்களில் விஜய்க்கு ஓரளவு செல்வாக்கு இருப்பது உறுதியானது. அதே நேரத்தில் தென் மாவட்ட அரசியலிலும் தீவிர கவனம் செலுத்த முடிவு செய்துள்ள விஜய் தமிழக கட்சி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டை வருகின்ற ஆகஸ்ட் 25ஆம் தேதி மிகப் பிரமாண்டமாக நடத்த முடிவெடுத்திருக்கிறார். மாநாட்டுக்கு ஏறக்குறைய 20 நாட்களே இருக்கும் நிலையில் தீவிரமாக அந்த பணிகள் நடைபெறுகிறது.
கடந்த மாதம் பூமி பூஜை நடைபெற்ற நிலையில் தற்போது மிகப் பிரம்மாண்டமாக மாநாட்டு மேடை அமைக்கப்பட்டு வருகிறது. இரவு பகல் பாராமல் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மாநாட்டு மேடை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .ஜேசிபி உள்ளிட்ட வாகனங்களை கொண்டு சுமார் 500 ஏக்கர் பரப்பளவிலான நிலம் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. 300 ஏக்கரில் மாநாட்டுக்கு, 200 ஏக்கரில் பார்க்கிங், உணவு கூடம், தற்காலிக மருத்துவமனை, கழிப்பிட வசதி உள்ளிட்டவை அமைக்கப்பட இருக்கிறது. 20 லட்சம் பேரை மாநாட்டுக்கு திரட்டி வருவோம் எனக் கூறியிருக்கிறார் கட்சியின் பொதுச் செயலாளரான ஆனந்த்.
மாநாட்டுக்கு ஏறக்குறைய 20 நாட்களே இருக்கும் நிலையில் திருச்சி தொடங்கி கன்னியாகுமரி வரையிலான மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் குறைந்தபட்சம் 50 ஆயிரம் பேரை திரட்ட வேண்டும் என உத்தரவு பறந்து இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் சென்னை தொடங்கிய திருச்சி வரையிலான வட மாவட்டங்களிலும் தொண்டர்கள் மதுரை நோக்கி வர தயாராக இருக்கின்றனர்.
தூத்துக்குடி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பாரப்பத்தி பகுதியில் இந்த மாநாடு நடக்க இருக்கிறது. மதுரையை பொறுத்தவரை எப்போதும் தமிழக அரசியலில் மையப் புள்ளியாக இருந்திருக்கிறது. தேமுதிக, அதிமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல கட்சிகள் மதுரையில் இருந்துதான் தங்களது அரசியல் பயணத்தை துவங்கி இருக்கின்றன. திமுகவின் முக்கிய மாநாடுகளும் நிகழ்வுகளும் மதுரையில் அரங்கேறி இருக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட திமுகவின் செயற்குழு கூட்டம் அங்குதான் நடைபெற்றது கவனிக்கத்தக்கது.
அந்த வகையில் சென்டிமெண்டாக விஜய் மதுரையை தேர்ந்தெடுத்திருக்கிறார். தென் மாவட்டங்களில் தனது செல்வாக்கை நிலை நிறுத்தியது போலும் ஆகிவிடும், தனது சினிமா குருவான விஜயகாந்தின் சொந்த ஊரில் அவரது பிறந்த நாளில் மாநாடு நடத்துவது அவரது ரசிகர்களை தனது பக்கம் இழுக்க உதவும் என பல்வேறு திட்டங்களை தீட்டி வைத்திருக்கிறார். இரவு பகலாக மாநாட்டு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மாநாடு என்ன மாதிரியான தாக்கத்தை தமிழக அரசியலில் நிகழ்த்தப்போகிறது என்பதுதான் தற்போதைய எதிர்பார்ப்பு.












Click it and Unblock the Notifications