ஜெயக்குமாருக்கு வந்த சிக்கல்.. வாக்கி டாக்கி ஊழல் பற்றி விரிவான விசாரணை நடத்தும் லஞ்ச ஒழிப்புத்துறை
மீனவர்களுக்கு வாக்கி-டாக்கி வாங்கியதில் அரசுக்கு ரூ.35.72 கோடி இழப்பீடு ஏற்பட்டதற்கான 144 ஆவணங்கள் சிக்கியுள்ளது.
மதுரை: மீனவர்களுக்கு வாக்கி-டாக்கி வாங்கியதில் அரசுக்கு ரூ.35.72 கோடி இழப்பீடு ஏற்பட்டதற்கான 144 ஆவணங்கள் சிக்கியுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். விசாரணை நடைபெற 3 மாத காலம் அவகாசம் தேவை எனவும் ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை சார்பாக நிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
மதுரை மேலமடையைச் சேர்ந்த மோகன், தாக்கல் செய்திருந்த மனுவில், "தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும்போது எல்லை தாண்டினால் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதை தடுக்கும் வகையில் அவர்களுக்கு வாக்கி-டாக்கி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
கடந்த 2008-ம் ஆண்டு இதுதொடர்பாக தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இந்த திட்டத்திற்காக நிதி ஒதுக்கப்பட்டு, 3,100 வாக்கி-டாக்கிகள் வாங்குவதற்கு தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

வாக்கி டாக்கி ஊழல் முறைகேடு
ராமநாதபுரம் மாவட்ட கடலோர எல்லைப்பகுதிகளில் 3 தகவல் தொடர்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டு, இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன்பின் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த திட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன.

லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார்
சுமார் ரூ.37 கோடி அளவில் முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணையை முடிக்கும்படி உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தார்.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
இந்த வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்த போது, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி, இதே புகாருடன் லஞ்ச ஒழிப்புத்துறையில் எத்தனை மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன? பெறப்பட்ட மனுக்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் என்ற விவரத்தை தமிழக அரசு சார்பாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தனர்.

அறிக்கை தாக்கல்
இந்த மனு நீதிபதி முரளிசங்கர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தரப்பில், "மீனவர்கள் பயன்பாட்டிற்கான அதிநவீன வாக்கி-டாக்கி வாங்கியதில் முறைகேடு குறித்து பல புகார்கள் வந்துள்ளது. கடலில் எல்லை தாண்டி செல்லாமல் இருக்க தமிழக மீனவர்களுக்கு வழங்கப்பட்ட வாக்கி டாக்கி மொத்தமாக வாங்கியதில் முறைகேடு நடந்து உள்ளது என்ற மனுதாரரின் புகார் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது

35 .72 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு
விசாரணையில் 35 .72 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டு உள்ளதாகவும் 144 ஆவணங்கள் சிக்கி உள்ளது என உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் லஞ்ச ஒழிப்புத்துறை நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. விசாரணை நடைபெற 3 மாத காலம் அவகாசம் தேவை என நிலை அறிக்கை தாக்கல் செய்தனர். இதனை ஏற்றுக் கொண்டு மனுவை மனுதாரர் திரும்பப் பெற்றதால் வழக்கு முடித்து வைக்கப்பட்டது. எனினும், மனுதாரர் தரப்பில், மனுவை திரும்பப் பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டது. இவற்றை பதிவு செய்து கொண்ட நீதிபதி மனுதாரர் மனுவை திரும்பப் பெற அனுமதித்து உத்தரவிட்டார்.
Recommended Video

ஜெயக்குமாருக்கு சிக்கல்?
வாக்கி டாக்கி ஊழல் விசாரணை குறித்து கடந்த வாரம் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், பழனிசாமி கம்பெனியின் ஆட்சியில் மீன்வளத்துறை சார்பாக மீனவர்களுக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்ததாக அளிக்கப்பட்ட புகார் குறித்து தி.மு.க அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை ஓராண்டுக்கு மேலாக மௌனம் காப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பியிருந்தார். இது தொடர்பாக புகார் அளித்தவர் நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டிய பிறகும் லஞ்ச ஒழிப்புத்துறை மழுப்பலான பதிலை தெரிவித்திருப்பது ஏன்? என்றும் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். தற்போது இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை தனது விசாரணையை வேகப்படுத்தியுள்ளதால் அப்போதய மீன் வளத்துறை அமைச்சராக இருந்த ஜெயக்குமாருக்கு சிக்கல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications