அதே மண்டபத்தில்.. குறுக்கே புகுந்த டிடிவி தினகரன்.. பிடி கொடுக்காத பேச்சால் ஓபிஎஸ் தரப்பு குழப்பம்!
மதுரை : எடப்பாடி பழனிசாமியை வீழ்த்த ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன் ஆகியோரோடு கை கோர்ப்பார் எனத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், 'ஐ ஹேட் அதர் ஐடியா' எனச் சொல்லியிருக்கிறார் டிடிவி.தினகரன்.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு, ஓபிஎஸ்ஸை ஓரங்கட்டி இடைக்கால பொதுச் செயலாளராக உருவெடுத்தார் எடப்பாடி பழனிசாமி. ஆனாலும், கட்சி யார் கையில் இருக்கிறது என்பதில் குழப்பம் நீடிக்கிறது.
கட்சி நிர்வாகிகள் மத்தியில் ஈபிஎஸ்ஸுக்கு அதிக ஆதரவு இருக்கும் நிலையில், நீதிமன்றத்தையும், தேர்தல் ஆணையத்தையும் மாறி மாறி நாடி வரும் பன்னீர்செல்வம், டெல்லி ஆதரவு, சசிகலா ஆதரவை பெரும் திட்டங்களில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இணையும் கரங்கள்
தொடர்ச்சியாக பலத்த பின்னடைவுகளை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து வரும் நிலையில், அவர் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோருடன் கைகோர்த்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக டஃப் கொடுப்பார் என்று கூறப்பட்டு வருகிறது. அதை மெய்ப்பிக்கும் விதமாகவே சசிகலா, தினகரன் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை மட்டுமே கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஓபிஎஸ் மகன் ஓபி.ரவீந்திரநாத் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்கும் வரிந்து கட்டி வந்து கண்டனம் தெரிவித்தார் சசிகலா.

பொடி வைத்துப் பேசிய தினகரன்
எந்த நேரத்திலும், சசிகலா - ஓபிஎஸ் சந்திப்பு ஏற்படலாம் என்ற நிலைதான் இருந்து வருகிறது. சசிகலா ஓபிஎஸ்ஸூக்கு ஆதரவு அளித்தால், டிடிவி தினகரனும் இணைந்து பெரும் அணியைக் கட்டமைப்பார்கள் என்ற பேச்சும் நிலவி வருகிறது. இந்நிலையில், ‘யாரிடமும் சமரசம் செய்யப்போவதில்லை' என டிடிவி தினகரன் பொடி வைத்துப் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆகஸ்ட் 15ல் பொதுக்குழு
மதுரையில் இன்று நடைபெற்ற அமமுக செயல்வீரர்கள், வீராங்கனைகள் கூட்டத்தில் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன், "ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று அமமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் ஜெயலலிதா பொதுக்குழு கூட்டம் நடத்தும் வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் நடைபெறும். இதற்கான அறிவிப்பை இன்னும் இரண்டு மூன்று நாட்களில் கொடுப்பேன். " எனத் தெரிவித்துள்ளார்.

சமரசம் கிடையாது
மேலும் பேசிய டிடிவி தினகரன், "234 தொகுதிகளிலும் கட்டமைப்பை உருவாக்கி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. யாரிடமும் சமரசம் செய்யப்போவதில்லை, யாருக்காகவும் பின்வாங்கப் போவதில்லை. ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் மீட்பது தான் ஒரே இலக்கு." என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

கூடிய விரைவில்
தொடர்ந்து பேசிய அவர், "தற்போது மு.க.ஸ்டாலின் நினைத்தால் கூட அதிமுகவில் பொதுச்செயலாளராக ஆக முடியும். அந்த அளவிற்கு தான் அதிமுக உள்ளது. தற்போது அதிமுகவிலிருந்து வெளியேறியவர்கள் நம்மிடம் வர முடியாமலும் வேறு கட்சிக்கு செல்ல முடியாமலும் தவிக்கின்றனர். கூடிய விரைவில் நம்மிடம் வந்து சேருவார்கள். உடல் அங்கேயும், உள்ளம் இங்கேயுமாக இருக்கும் அம்மாவின் தொண்டர்கள் விரைவில் நம்மோடு இணைவார்கள்." எனத் தெரிவித்துள்ளார்.

முனுசாமி கேஸ் போடுவார்
மேலும், "ஜெயலலிதா வகித்த தலைமை பதவியை எல்லோரையும் கவர்ந்து, வசப்படுத்தி வாங்கியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. எதைக் கொடுத்து தலைமைப் பதவிக்கு வந்தார் எடப்பாடி பழனிசாமி என நான் கூறினால், கே.பி.முனுசாமி என் மீது கேஸ் போடுவேன் என்கிறார். தங்களை காப்பாற்றிக் கொள்ளத்தான் அதிமுகவில் நிர்வாகிகள் இருக்கின்றனர். தொண்டர்களை காப்பாற்ற அல்ல." எனப் பேசியுள்ளார்.
Recommended Video

பிடி கொடுக்காமல்
ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரனோடு இணைவார் எனப் பேசப்பட்டு வரும் நிலையில், டிடிவி தினகரனோ யாரிடமும் சமரசம் இல்லை என்று திட்டவட்டமாகக் கூறி வருகிறார். அதேநேரம், அதிமுகவில் இருந்து வெளியேறியவர்கள் நம் பக்கம் கூடிய சீக்கிரம் வருவார்கள் என்றும் பேசி வருகிறார். ஓபிஎஸ் விவகாரத்தில் தினகரனின் திட்டம் தான் என்ன என தலையைச் சொறிகிறார்கள் ஓபிஎஸ் ஆதரவு அதிமுக தொண்டர்கள்.












Click it and Unblock the Notifications