பக்கத்து சீட்டுக்கே பொங்குனாரே.. பாஜக ஐடியாவை பார்த்தீங்களா.. ‘சிக்னல்’.. உற்சாகத்தில் ஓபிஎஸ் டீம்!
மதுரை : பக்கத்தில் ஓபிஎஸ் அமரக்கூடாது என கொந்தளித்து போராட்டம் நடத்திய எடப்பாடி பழனிசாமியே, ஓ.பன்னீர்செல்வத்துக்கு அருகில் நிற்கும்படி ஆகிவிட்டது, அடுத்தடுத்து ஓபிஎஸ் சொல்படியே நடக்கும் பாருங்கள் என வெடி வீசுகிறார்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.
நேற்று தமிழகம் வந்த பிரதமர் மோடியை மதுரை விமான நிலையத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் வரவேற்று, வழியனுப்பி வைத்தனர்.
பிரதமர் மோடியை வரவேற்றபோது தள்ளித் தள்ளி நின்ற ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரையும் அருகே வரவழைத்து அவர்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்டுள்ளார் பிரதமர் மோடி.
அதேபோல, திரும்பிச் செல்லும்போதும் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் அருகருகே நின்று பிரதமர் மோடியை வழியனுப்பி வைத்தனர். அருகருகே நிற்கும் ஏற்பாட்டின் மூலமே எடப்பாடிக்கு ஸ்ட்ராங்கான சேதியை சொல்லி இருக்கிறது பாஜக தலைமை என்கிறார்கள்.

முரண்டு பிடிக்கும் ஈபிஎஸ்
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே கடந்த ஜூன் மாதம் தொடங்கி மோதல் நீடித்து வரும் நிலையில், பாஜக தலைமை, இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று விரும்புவதாகவே தெரிகிறது. ஆனால், ஓபிஎஸ்ஸை சேர்த்துக் கொள்ள முடியாது என முரண்டு பிடித்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. பாஜக தலைமையுடன் இருவரும் பலமுறை தனித்தனியாகப் பேசியும், இருவருக்கும் இடையேயான பிணக்கு நீடிக்கிறது. இந்நிலையில் தான் நேற்று தமிழகம் வருகை புரிந்தார் பிரதமர் மோடி.

இருவருமே
தமிழகம் வந்த பிரதமர் மோடியைச் சந்திக்க ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருமே தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர். தனித்தனியாகச் சந்திக்க இருவருமே நேரம் கேட்டிருந்த நிலையில், மோடியை விமான நிலையத்தில் வரவேற்க இருவருக்கும் ஒரே நேரத்தில் அனுமதி கிடைத்தது. மதுரை விமான நிலையத்தில் சுமார் 50 அழைப்பாளர்களுக்கு மோடியை வரவேற்க அனுமதி அளிக்கப்பட்டது. திமுக அமைச்சர்கள், பாஜக நிர்வாகிகள், அதிமுக ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகளைச் சேர்ந்தவர்கள் என பலர் பிரதமர் மோடியை மதுரை விமான நிலையத்தில் வரவேற்றனர்.

ஈக்குவல்
திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க நேற்று தனி விமானத்தில் மதுரை வந்த பிரதமர் மோடியை வரவேற்க விமான நிலையத்தின் உள்ளே எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் காத்திருந்தனர். எடப்பாடி பழனிசாமி தரப்பில் 5 பேருக்கும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் 5 பேருக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியின் இந்த வருகையில் இருவருமே ஈக்குவலாக ட்ரீட் செய்யப்பட்டனர்.

அருகே அழைத்த மோடி
ஈபிஎஸ், ஓபிஎஸ் ஒரே வரிசையில் பிரதமர் மோடியை வரவேற்றனர். அவர்கள் இடையே சிலர் நின்ற நிலையில், பிரதமர் மோடி வந்தபோது தள்ளித்தள்ளி நின்ற அவர்கள் இருவரையும் அருகே வருமாறு அழைத்து அவர்களிடமிருந்து பூங்கொத்தைப் பெற்று வரவேற்பை ஏற்றுக்கொண்டார் பிரதமர் மோடி. காந்தி கிராம பல்கலைக்கழக நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு திண்டுக்கல்லில் இருந்து கிளம்பிய பிரதமர் மோடி, மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் பயணத்தை தவிர்த்து சாலை மார்க்கமாகவே மதுரைக்கு வந்தார்.

மீண்டும் மதுரையில்
மதுரை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வழியனுப்ப அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், ஆர்பி உதயகுமார், ராஜன் செல்லப்பா, வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், கோபாலகிருஷ்ணன், ஆர். தர்மர் ஆகியோர் மதுரை விமான நிலையத்தில் காத்திருந்தனர். மதுரை விமான நிலையத்தில் ஈபிஎஸ் அல்லது ஓபிஎஸ்ஸிடம் தனியாக எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடத்தாமல், சிரித்தபடி சில வார்த்தைகள் மட்டும் பேசிவிட்டு மோடி விமானத்தில் ஏறிச் சென்றார்.

அருகருகே
பிரதமர் மோடிக்கு, எடப்பாடி பழனிசாமி சிரித்தபடி பூங்கொத்துக் கொடுத்து வழி அனுப்புவதும், அருகில் ஓ.பன்னீர்செல்வம் சிரித்தபடி இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி உள்ளது. பிரதமருக்கான வரவேற்பு நிகழ்ச்சியை போலவே வழி அனுப்பும் நிகழ்ச்சியிலும் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் பங்கேற்றனர். அனைவரிடமும் ரோஜாப்பூக்களைப் பெற்றுக்கொண்டுள்ளார். ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரையும், அருகருகே வைத்துக்கொண்டு பிரதமர் மோடி சிரித்தபடி பேசியுள்ளார்.

பார்த்தீங்களா?
இந்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுத்தான் உற்சாகமாக பேசுகிறார்கள் ஓபிஎஸ் அணியினர். சட்டப்பேரவையில் பக்கத்தில் சீட் இருந்ததற்கே கொந்தளித்து, போராட்டம் நடத்திய எடப்பாடி பழனிசாமி, இப்போது அருகருகே சிரித்துக்கொண்டு நிற்கும்படி ஆகிவிட்டது பார்த்தீர்களா? ஆரம்பம் முதலே ஓபிஎஸ் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று சொல்லி வருகிறார். ஓபிஎஸ் விருப்பத்தைத்தான் டெல்லியும் விரும்புகிறது.

அதான் நல்லது
அதை உறுதி செய்யும் வகையிலேயே ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரையும் அருகருகே நிற்கச் சொல்லி பாஜக தலைமை கூறியது. பாஜகவின் ஆதரவு யார் பக்கம் இருக்கிறது என்பதை இனியாவது ஈபிஎஸ் தரப்பு புரிந்துகொண்டு, ஓ.பன்னீர்செல்வம் பேச்சைக் கேட்டு நடந்து கொள்வதுதான் அவர்களுக்கு நல்லது. ஓபிஎஸ்ஸுக்கு எதிராகப் பேசுவதை பாஜகவும் விரும்பாது என்பதை நேற்றைய நிகழ்வே ஈபிஎஸ்ஸுக்கு குறிப்புணர்த்தி விட்டது என்கிறார்கள்.

சிறப்பான சம்பவம்
அதிமுகவில் ஏற்கனவே டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் பிரிந்து நிற்கிறார்கள். இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் இரு அணியாக வேறு பிரிந்து நிற்பதால் வாக்குகள் சிதறிவிடும். வெற்றி வாய்ப்பு பறிபோகும் என்று பாஜக கருதுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் மதுரையில் சிறப்பான சம்பவத்தைச் செய்து எடப்பாடி பழனிசாமிக்கு தனது முடிவை தெளிவாகச் சொல்லிவிட்டார் மோடி என்கிறார்கள் பாஜக தரப்பினரும்.












Click it and Unblock the Notifications