26/11:16 ஆண்டுகள்..உலகம் அதிர்ந்த மும்பை பயங்கரவாத தாக்குதல்-மக்களை காத்த மாவீரர்களுக்கு வீரவணக்கம்!
மும்பை: மகாராஷ்டிரா தலைநகர் மும்பை.. இந்தியாவின் வர்த்தகத் தலைநகர்.. 16 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நவம்பர் 26-ந் தேதி உலகையே உறைய வைத்த மும்பை பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. மும்பையில் 3 நாட்கள் முகாமிட்டு பயங்கரவாதிகள் நடத்திய இந்த கொடூர பயங்கரவாத தாக்குதலில் 175 பேர் உயிரிழந்தனர். 300-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மும்பையில் 26/11 தாக்குதலில் மக்களைப் பாதுகாத்து வீரமரணடைந்த மாவீரர்களுக்கு இன்று மகாராஷ்டிரா ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோர் வீரவணக்கம் செலுத்தினர்.
2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் இதே 26-ந் தேதி இரவு... பாகிஸ்தானில் இருந்து அரபிக் கடல் வழியாக படகு மூலமாக இந்தியாவின் வர்த்தகத் தலைநகரான மும்பை நோக்கி பயங்கரவாத கும்பல் தரை இறங்கியது. மும்பைக்குள் ஆயுதங்கள், வெடிகுண்டுகள் நுழைந்த இந்த பயங்கரவாத கும்பல் தாஜ் ஹோட்டல்,
ஓபராய் ஹோட்டல், சத்திரபதி சிவாஜி ரயில் நிலையம், நாரிமன் ஹவுஸ் என பல இடங்களை துப்பாக்கி முனையில் தங்கள் வசமாக்கியது.

அத்துடன் நிற்காமல் ஈவு இரக்கமே இல்லாமல் அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்து உலகையே குலைநடுங்க வைத்தது. இந்த பயங்கரவாதிகளுடன் மும்பை காவல் துறை மற்றும் தேசிய கமாண்டோ படையினர் கடும் யுத்தம் நடத்தினர்.
நவம்பர் 26-ந் தேதி தொடங்கிய இந்த யுத்தம் நவம்பர் 28-ந் தேதி வரை 3 நாட்கள் இரவு பகலாக நீடித்தது. உலக நாடுகள் அனைத்தும் உறைந்த விழிகளுடன் இந்த யுத்தத்தையே கவனித்துக் கொண்டிருந்தன. நவம்பர் 28-ந் தேதி அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதியைத் தவிர அத்தனை பாகிஸ்தான் தீவிரவாதிகளும் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்திய மண்ணுக்குள் நுழைந்து ஆடிய இந்த வெறியாட்டத்தில் 175 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். உயிரிழந்தோரில் 30 பே வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். 15 மும்பை போலீசார் மற்றும் 2 தேசிய கமாண்டோ படை வீரர்களும் இந்த யுத்தத்தில் வீரமரணம் அடைந்தனர். இவர்களில் ஹேமந்த் ஹர்கரே, துகாராம் ஓம்பலேவின் வீர தீரங்கள் இந்தியாவின் சரித்திரப் பக்கங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும்.
மும்பை பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டு உயிருடன் கைது செய்யப்பட்ட அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதி 2012-ம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார்.
மும்பை தாக்குதலின் 16-வது ஆண்டு நாளில் மக்களைப் பாதுகாத்து மாவீரர்களான போலீசார், தேசிய கமாண்டோ படையினருக்கான நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு இன்று நடைபெற்றது. மும்பை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த நினைவிடத்தில் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவார் உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர்.
நமது நாட்டு மக்களைப் பாதுகாக்க இன்னுயிர் ஈந்த மாவீரர்களுக்கு தேசமே வீரவணக்கம் செலுத்துகிறது!












Click it and Unblock the Notifications