நடத்தையில் சந்தேகம்.. டெக்ஸ்ட் மெசேஜ் வேற! தாய் என்றும் பாராமல் மகன் செய்த கொடூரம்.. ஷாக்கான போலீஸ்
மும்பை: தனது தாயின் நடத்தையில் சந்தேகமடைந்த 17 வயது மகன், அவரை கோடாரியால் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனிதர்களின் உறவு முறை குறித்த சரியான புரிதல்கள் பெரியவர்களை விட சிறார்களுக்கு அதிகம் தேவைப்படுகிறது. ஆண், பெண் உறவு முறை என்றால் என்ன? அதில் இருக்கும் சிக்கல்கள், இந்த உறவுமுறையை நாம் எப்படி சரியாக புரிந்துக்கொள்வது, பெண்களுக்கு இருக்கும் உரிமைகள், அது எங்கெல்லாம் மறுக்கப்படுகிறது, ஆணாதிக்க சிந்தனைகள் குடும்பங்களை எந்த அளவுக்கு பாதிக்கிறது என்பது பற்றி சிறார்களுக்குதான் புரிதல்களை நாம் உருவாக்க வேண்டும் என்று உளவியல் நிபுணர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

இப்படி உருவாக்க தவறிவிட்டால் அது ஒட்டுமொத்த குடும்பத்தையும், சமூகத்தையும் கூட பாதித்துவிடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். இவர்கள் எச்சரித்ததை போன்ற சம்பவம் ஒன்று தற்போது நடந்திருக்கிறது. அதாவது மும்பையில் 17 வயது சிறுவன் ஒருவன் தனது தாய் அடிக்கடி யாரோ முகம் தெரியாத நபருக்கு டெக்ஸ்ட் மெசேஜ் செய்கிறார் என்பதால் அவரை கோடாரி கொண்டு சரமாரியாக வெட்டி படுகொலை செய்திருக்கிறார்.
இது குறித்து போலீஸ் கூறுகையில், "மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில், வசாய் டவுன்ஷிப்பின் பரோல் பகுதியில் இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்திருக்கிறது. சிறுவன், 35 வயதான தனது தாயின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வந்திருக்கிறான். இதனால் அடிக்கடி இருவருக்கும் இடையில் சண்டை நடந்திருக்கிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது சிறுவனின் தாய் யாருக்கோ டெக்ஸ்ட் செய்துக்கொண்டிருந்திருக்கிறார்.
இதனால் எரிச்சலடைந்த சிறுவன் டெக்ஸ்ட் செய்வதை நிறுத்துமாறு கூறியுள்ளார். பின்னர் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற அவன் பக்கத்தில் இருந்த கோடாரியை கொண்டு தனது தாயை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் அவர் பலத்த காயமடைந்த நிலையில் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பிவாண்டியில் உள்ள இந்திரா காந்தி நினைவு மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கின்றனர். ஆனால் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
இதனையடுத்து சிறுவன் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302 (கொலை) கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்திருக்கிறோம். அவர் பயன்படுத்திய ஆயுதம், அவரது தாய் பயன்படுத்திய மொபைல் போன் ஆகியவற்றையும் பறிமுதல் செய்திருக்கிறோம். இந்த சம்பவம் நடந்தபோது வீட்டில் இவர்கள் இருவர் மட்டுமே இருந்திருக்கின்றனர்" என்று மாண்ட்வி காவல் நிலைய ஆய்வாளர் அசோக் காம்ப்ளே கூறியுள்ளார். டெக்ஸட் மெசேஜ் செய்ததற்காக தனது தாயையே சிறுவன் ஒருவன் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications