எது நாங்க பாஜகவின் பி டீமா.. காங். உடனும் கூட்டணி வைக்கவும் தயார்.. சொல்வது ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி
மும்பை: பாஜகவை வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே அணியில் இணைய வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வரும் நிலையில், இது தொடர்பாக ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி மூத்த தலைவர் ஒருவர் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
தெலங்கானாவின் ஹைதராபாத்தை மையமாகக் கொண்டது ஒவைசியின் மஜ்லிஸ் கட்சி. மஸ்லிஸ் கட்சி தலைவர் ஒவைசி ஹைதராபாத்தில் இருந்து தான் எம்பியாக உள்ளார்.
இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாகவே ஓவைசி தெலங்கானாவைத் தாண்டி, வேறு மாநிலங்களிலும் மஜ்லிஸ் கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கி உள்ளார்.

மஜ்லிஸ் கட்சி
கடந்த காலத்தில் நடைபெற்ற பல்வேறு மாநிலச் சட்டசபைத் தேர்தல்களில் அவர் தொடர்ச்சியாகப் போட்டியிட்டு வருகிறார். தமிழகத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் கூட அவர் அமமுக உடன் கூட்டணி அமைத்து அனைவருக்கும் நினைவில் இருக்கலாம். இருப்பினும், அவர் எதிர்க்கட்சிகளின் வாக்குகளைச் சிதறடிக்கவே இதுபோல தனித்துப் போட்டியிடுவதாகவும் இது பாஜகவுக்குச் சாதகமாக இருப்பதாகவும் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

பாஜகவின் பி டீம்
மேலும், ஒவைசியின் மஜ்லிஸ் கட்சியை பாஜகவின் பி டீம் என்றும் மற்ற எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்நிலையில், இது தொடர்பாக மஜ்லிஸ் கட்சியின் எம்பி இம்தியாஸ் ஜலீல் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசுடன் கூட்டணி வைக்கத் தாயாராக உள்ளதாகவும் இம்தியாஸ் ஜலீல் கூறினார்,

கூட்டணி தயார்
இது குறித்து இம்தியாஸ் ஜலீல் மேலும் கூறுகையில், "ஒவைசி தலைமையிலான மஜ்லிஸ் கட்சி பாஜகவின் 'பி' டீம் இல்லை. கடந்த வெள்ளிக்கிழமை தேசியவாத காங். தலைவர் ராஜேஷ் தோபே என்னைச் சந்தித்தார். ஏதோ எங்களால் தான் பாஜக வெல்கிறது என்பது போல சில கட்சிகள் எப்போதும் எங்களைக் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்த குற்றச்சாட்டுத் தவறு என்பதை நிரூபிக்கத் தேசியவாத காங். கட்சியுடன் கூட்டணிக்குத் தயார். இருப்பினும், இதில் இறுதி முடிவை அவர்கள் தான் எடுக்க வேண்டும். அவர்கள் கூட்டணி வைக்கத் தாயாராக உள்ளனரா இல்லையா என்பதைப் பார்க்கலாம்.

மறுத்துவிட்டனர்
இந்தக் கட்சிகளுக்கு இஸ்லாமியர்களின் வாக்குகள் தேவை. காங்கிரஸும் மதச்சார்பற்றவர்கள், அவர்களுக்கும் முஸ்லிம்களின் வாக்குகள் வேண்டும் என்கிறார்கள். அவர்களுடன் கைகோர்க்க நாங்களும் தயாராக இருக்கிறோம். நமது நாட்டிற்கு பாஜகவால் மோசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. எனவே, அவர்களை வீழ்த்த எங்களால் முடிந்த அனைத்தையும் செய்யத் தயாராக உள்ளோம். உத்தரப் பிரதேச தேர்தலில் கூட சமாஜ்வாதி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி குறித்துப் பேசினோம். ஆனால் அவர்கள் மறுவிட்டனர். அவர்களுக்கு முஸ்லிம்களின் வாக்குகள் தேவை. ஆனால் அசாதுதீன் ஒவைசி தேவையில்லை என்கிறார்கள்.

உள்ளாட்சித் தேர்தல்
மகாராஷ்டிராவிலும் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் முஸ்லிம்களின் வாக்குகளை விரும்புகின்றன. ஆனால் அவர்களும் மஜ்லிஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை என்றே தெரிகிறது. நிலைமை இப்படி இருக்க பாஜகவின் வெற்றிக்கு எங்கள் மீது பழி போடுகிறீர்கள். நான் சொல்கிறேன் வரும் தேர்தல்களில் ஒன்றாகப் போட்டியிட தாயாராகவே உள்ளோம். நடைபெறும் (அவுரங்காபாத்) உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி வைக்கலாமா என்பதை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அவர்கள் கூட்டணிக்குச் சம்மதிக்கவில்லை என்றால் தனித்துப் போட்டியிடவும் தயார்" என்றார்.












Click it and Unblock the Notifications