அமித்ஷாவால் ‛அது’ முடியவில்லை! வகுப்புவாத சக்திகளை வோரோடு அகற்றுங்க! சரத்பவார் ஆக்ரோஷம்
மும்பை: ‛‛டெல்லி ஜஹாங்கிர்புரியில் வன்முறையை தடுக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தவறிவிட்டார். அவரது கையில் அதிகாரம் இருந்தும் கூட அவரால் டெல்லி போன்ற பெரிய நகரங்களில் வன்முறையை தடுக்க முடியவில்லை. இதனால் ஆட்சியில் உள்ள வகுப்புவாத சக்திகளை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும்'' என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் கூறினார்.
மகாராஷ்டிராவில் சிவசேனா, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்துகின்றன. காலம் காலமாக பாஜகவுடன் கைகோர்த்திருந்த சிவசேனா கடந்த சட்டசபை தேர்தலின்போது வேறு நிலைபாட்டை எடுத்தது.
இந்த கூட்டணிக்கு ‛மகாராஷ்டிர விகாஸ் அகாடி' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த கூட்டணி சார்பில் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்வராக உள்ளார்.
இந்நிலையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் மீது மத்திய விசாரணை அமைப்புகளான சிபிஐ, அமலாக்கத்துறை தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கைக்கு பின்னால் மத்திய பாஜக அரசு உள்ளதாகவும், இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை எனவும் அக்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும், தொடர்ச்சியாக மத்திய பாஜக அரசுை அவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் சரத்பவார் பேசியதாவது:

வேறு மாநிலம் செல்லாத தலைவர்கள்
வெளிநாடுகளின் தலைவர்கள் குஜராத்துக்கு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்பட அனைத்து தலைவர்களும் குஜராத்துக்கு மட்டுமே அழைத்து செல்லப்படுகின்றனர். பிற மாநிலங்களுக்கு அவர்கள் அழைத்து செல்லப்படவில்லை. இதன்மூலம் இந்தியாவின் பிற மாநிலங்களை மத்திய பாஜக அரசு எப்படி நினைக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

அமித்ஷா அலட்சியம்
டெல்லி ஜஹாங்கிர்புரியில் வன்முறை நடந்ததன் மூலம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வகுப்புவாத கலவரங்களில் இருந்து தலைநகரை பாதுகாப்பதில் தவறி விட்டார். டெல்லி போலீஸ் துறை மத்திய உள்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் அமித்ஷா அலட்சியமாக இருந்துள்ளார். தலைநகர் டெல்லியில் நடக்கும் ஒரு நிகழ்வும் உலகளவில் செய்தியாக்கப்பட்டு வருகிறது. தற்போதைய நிகழ்வு என்பது டெல்லியில் அமைதியின்மை உள்ளது போன்ற பிம்பத்தை ஏற்படுத்திவிடும்.

வேரோடு பிடுங்கி எறியுங்க...
டெல்லியில் பிரிவினை ஏற்படாமல் ஒற்றுமை நிலவ அமித்ஷா நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும். ஆனால் அவர் அதை செய்யவில்லை. அமித்ஷாவிடம் அதிகாரம் இருந்தாலும் கூட டெல்லி போன்ற நகரங்களில் அமைதியை நிலைநாட்டுவதை அமித்ஷாவால் செய்ய முடியவில்லை. இதனால் ஆட்சியில் உள்ள வகுப்புவாத சக்திகளை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும்.

முட்டாள்தனமானது
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அணில் தேஷ்முக் ரூ.100 கோடி லஞ்சம் வாங்கியதாக முதலில் கூறினர். அதன்பிறகு ரூ.4 கோடி என குறைத்தனர். 20 ஆண்டுகள் பழைய வழக்கை தொடர்புப்படுத்தி நவாப் மாலிக் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். சிபிஐ, அமலாக்கத்துறையை பயன்படுத்தி தேசியவாத காங்கிரஸ் மட்டுமின்றி நாட்டில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளையும் முடக்க பாஜக முயல்கிறது. இது முட்டாள்தனமானது. இதை கைவிட்டுவிட்டு மோசமான வறுமையில் இருக்கும் இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், இரட்டை இலக்க பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications