டிரெய்லர் முடிஞ்சது! ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்சன்டின் திருமணம் எங்கே நடக்கிறது? வெளியான தகவல்
மும்பை: இந்திய பணக்காரர்களுள் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்சன்டுக்கும் லண்டனில் ஜூலை மாதம் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முகேஷ் அம்பானி- நீடா அம்பானிக்கு 2 மகன்கள் ஒரு மகள் உள்ளனர். இதில் மூத்த மகன் ஆகாஷ் அம்பானிக்கு ஸ்லோகா மேத்தாவுடன் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். அது போல் ஈஷா அம்பானிக்கு திருமணமாகி இரட்டை குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் கடைக் குட்டியான ஆனந்த் அம்பானி, தன்னுடன் படித்த ராதிகா மெர்சன்டை காதலித்து வந்தார். இவரும் அவ்வப்போது வெளியே சுற்றி வந்தது இவர்களின் பெற்றோருக்கும் தெரியவந்தது.
இதையடுத்து பெற்றோர் சம்மதத்துடன் இவர்கள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு மார்ச் மாதம் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் களைகட்டின. அம்பானி குடும்பத்தினருக்கு பிடித்த இடமான குஜராத் மாநிலம் ஜாம்நகரில்தான் இவர்களுக்கு இந்த ப்ரீ வெட்டிங் நடந்தது.
3 நாட்கள் நடந்த இந்த நிகழ்வில் தனது தந்தை குறித்து ஆனந்த் அம்பானி உருக்கமாக கூறியது காண்போரை கலங்கச் செய்தது. அது போல் மருமகள் ராதிகாவும் தனது மாமனார் தனக்கு தந்தை போன்றவர் என கூறி அவரை நெகிழ்ச்சி அடைய செய்தார். ஜாம் நகர், முகேஷ் அம்பானியின் தாய் கோகிலாவின் சொந்த ஊர் என்பதால் இந்த ஊரில் தனது மகனின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகளை நடத்த முகேஷ் விரும்பியிருந்தார்.
ஜாம்நகரில் 400 ஏக்கரில் புதிய நகரத்தையும் 3000 ஏக்கரில் வந்தாரா என்ற புதிய வனத்தையும் அம்பானி குழுமம் உருவாக்கியுள்ளது. இங்குதான் இந்த திருமணத்திற்கு முந்தைய நிகழ்வு நடந்தது. இந்த விழாவில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவரான மார்க் சூகர்பெர்க், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப், நடிகர் ரஜினிகாந்த் , மனைவி லதா, மகள் ஐஸ்வர்யாவுடன் கலந்து கொண்டனர்.
அது போல் அமெரிக்க பாப் பாடகி ரிஹானா வந்திருந்தார். அவர் இந்த நிகழ்வில் இசை கச்சேரிகளை நடத்தியிருந்தார். வந்த விருந்தினருக்கு மூன்று வேளையும் அனைத்து விதமான உணவு வகைகளும் பரிமாறப்பட்டன. உணவுக்கு மட்டும் ரூ 130 கோடி செலவு செய்யப்பட்டதாம்.
ஜாம் நகரில் நடந்த ப்ரீ வெட்டிங்கே இப்படி கோலாகலமாக நடந்தது என்றால் திருமணம் எப்படி இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு அனைவர் மனதிலும் எழுந்துள்ளது. அந்த வகையில் இருவருக்கும் ஜூலை மாதம் பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள ஸ்டோக்பார்க் எஸ்டேட்டில் கோலாகலமாக திருமணம் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் முக்கிய விஐபிக்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் துபாயில் ஆனந்த் அம்பானியும் ராதிகா மெர்சன்ட்டும் இரு மால்களுக்கு பலத்த பாதுகாப்புடன் வந்திருந்தனர். அவர்களின் பாதுகாப்புக்காகவே 20 கான்வாய்கள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications