கணவரை "குடிகாரன்" என சொல்லக் கூடாது.. அதுவும் கொடுமைதான்! விவகாரத்தை உறுதி செய்த மும்பை ஐகோர்ட்!
மும்பை: விவாகரத்து தொடர்பான மேல்முறையீட்டு மனு ஒன்றை விசாரணை செய்த மும்பை ஐகோர்ட் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளது.
மும்பை உயர் நீதிமன்றத்தில் 50 வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவர், தனது விவாகரத்துத் தொடர்பாக மேல்முறையீட்டு மனு ஒன்றைத் தாக்கல் செய்து இருந்தார்.
குடும்ப நல நீதிமன்றம் அவர்களுக்கு விவாகரத்து வழங்கி இருந்த நிலையில், அதை எதிர்த்து இந்த பெண் மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

மேல்முறையீட்டு மனு
வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டு இருந்த போதே, அந்த ராணுவ வீரர் உயிரிழந்துவிட்டார். இதையடுத்து அவரது மகன் எதிர் மனுதாரராகச் சேர்க்கப்பட்டார். இவர்களது விவாகரத்து வழக்கு முதலில் குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில் கடந்த 2005இல் அவர்களுக்கு விவாகரத்து வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து அந்த மனைவி மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

குடிப் பழக்கத்திற்கு அடிமை
இந்த மனுவை நீதிபதிகள் நிதின் ஜம்தார் மற்றும் ஷர்மிளா தேஷ்முக் அமர்வு விசாரித்து. கடந்த அக்டோபர் 12இல் இந்த மேல்முறையீட்டு மனுவை ரத்து செய்து மும்பை ஐகோர்ட், இது தொடர்பாக சில முக்கிய கருத்துகளையும் தெரிவித்தது. நீதிமன்றத்தின் முழு உத்தரவு இப்போது வெளியாகி உள்ளது. அதாவது அந்த பெண் தனது மேல்முறையீட்டு மனுவில் தனது கணவர் பெண்கள் பின்னால் சுற்றுபவர் என்றும் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் கூறி இருந்தார்.

ஆதாரம் இல்லை
இதற்கு அந்த நீதிபதிகள், "கணவனின் குணாதிசயத்திற்கு எதிராகத் தேவையற்ற மற்றும் பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அவரது நற்பெயருக்குச் சேதம் விளைவிப்பது கொடுமையான ஒன்று" என்றனர். மேலும், அந்த பெண் இப்படிக் குற்றஞ்சாட்டி உள்ளாரே தவிர, அதை நிரூபிக்கும் வகையில் எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்கவில்லை என்றும் தெரிவித்தனர். தொடர்ச்சியாக இப்படி பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறியதால் தனது மனுதாரர் மன ரீதியாகப் பாதிக்கப்பட்டு இருந்தார் என்று ராணுவ வீரர் சார்பில் ஆஜரான வக்கீல் தெரிவித்தார்.

கொடுமை
மேலும், குடும்பநல நீதிமன்றத்தில் கணவர் அளித்த வாக்குமூலத்தையும் மும்பை ஐகோர்ட் குறிப்பிட்டது. தனது குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளைக் கூட பார்க்க விடாமல் மனைவி தன்னை பிரித்தாக முன்னாள் ராணுவ வீரர் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டு இருந்தார். இது கொடுமையான ஒன்று என்று குறிப்பிட்ட மும்பை ஐகோர்ட் குடும்பநல நீதிமன்றம் அளித்த விவகாரத்தை உறுதி செய்தது.

உத்தரவு
மேலும் நீதிபதிகள், மனுதாரரின் கணவர் ஒரு முன்னாள் ராணுவ வீரர், அவர் மேஜராக ஓய்வு பெற்றவர், சமூகத்தின் உயர் மட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் சமூகத்தில் அந்தஸ்தைப் பெற்றவர் என்று தெரிவித்தனர். ராணுவ வீரர் குறித்து தேவையற்ற, பொய்யான மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறியும் குடிகாரன் மற்றும் பெண்கள் பின்னால் சுற்றுபவன் என்று ஆதாரமில்லாமல் கூறுவது கொடுமையானது என்று குறிப்பிட்டு மேல்முறையீட்டு மனுவை ரத்து செய்தனர்.












Click it and Unblock the Notifications