மகாராஷ்டிர தேர்தல் வேற நெருங்குதே.. பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு இருக்கா! கள நிலவரம் என்ன?
மும்பை: மகாராஷ்டிர தேர்தலுக்கு முன்னதாக தீபாவளி பரிசாக பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படலாம் எனச் சொல்லப்பட்டு வந்தது. ஆனால், இப்போது புவி சார் அரசியல் மொத்தமாக மாறியிருக்கும் நிலையில், பெட்ரோல், டீசல் விலை குறைப்பிற்குச் சாத்தியம் இருப்பதாகத் தெரியவில்லை என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்,
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயம் செய்து கொள்கின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றத்தைப் பொறுத்து பெட்ரோல், டீசல் விலை மாற்றி அமைக்கப்படுகிறது.

இருப்பினும், கடந்த பல மாதங்களாகவே பெட்ரோல், டீசல் விலை எந்தவொரு மாற்றமும் இல்லாமல் தொடர்கிறது. லோக்சபா தேர்தலுக்கு முன்பு மட்டும் 2 ரூபாய் விலை குறைக்கப்பட்ட நிலையில், அதன் பிறகு மாற்றம் செய்யப்படவில்லை.
கச்சா எண்ணெய்: நமது நாட்டில் விரைவில் மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடக்கும் நிலையில், அதற்கு முன்பு பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படலாம் எனச் சொல்லப்பட்டது. அதிலும் கடந்த மாதம் எல்லாம் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 70 டாலருக்கு கீழ் சரிந்தது. கடந்த 2021 டிசம்பருக்குப் பிறகு கச்சா எண்ணெய் விலை அந்தளவுக்குச் சரிந்ததே இல்லை.
இதனால் பலரும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்றே எதிர்பார்த்தார்கள். மகாராஷ்டிராவில் நவ. இரண்டாவது வாரம் தேர்தல் நடக்க வாய்ப்பு இருக்கிறது. அதற்கு முன்பு தீபாவளி பரிசாக இந்த மாத இறுதியில் பெட்ரோல், டீசல் குறைப்பு குறித்த அறிவிப்பு வரலாம் எனச் சொல்லப்பட்டது. அதேநேரம் பெட்ரோல், டீடல் விலை குறைப்பிற்கு வாய்ப்பு இருந்தாலும் அதை உறுதியாகச் சொல்ல முடியாது என்று பெட்ரோலிய அமைச்சகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.
அதிகாரி: இது தொடர்பாக அப்போதே அவர் கூறுகையில், "சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்தே வருகிறது எனச் சொல்ல முடியாது. ஏற்ற இறக்கம் மாறி மாறியே இருக்கிறது. 70 டாலருக்கு சென்றாலும் மீண்டும் அது உயர்ந்துவிட்டது. இப்படி நிலையில்லாமல் இருந்தால் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் சர்வதேச சந்தையில் இப்போது குறைகிறது எனக் குறைத்துவிட்டால்.. மீண்டும் அதிகரிக்கும் போது உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். தேர்தல் நெருங்கும் நேரத்தில் பெட்ரோல், டீசல் விலையை அதிகரித்தால் அது சரியாக இருக்காது" எனக் கூறியிருந்தார்.
உயர்கிறது: அதாவது நிச்சயம் கச்சா எண்ணெய் விலை இறங்கும் டிரெண்டில் இருந்தால் மட்டுமே விலை குறைப்பு சாத்தியம் என்று சொல்லியிருந்தார். அவர் இந்த கருத்துகளைச் சொல்லி ஓரிரு வாரங்கள் மட்டுமே ஆகியிருக்கிறது. ஆனால், சர்வதேச சந்தை மொத்தமாக மாறிவிட்டது. புவிசார் பதற்றங்கள் காரணமாகக் கச்சா எண்ணெய் விலை உயரத் தொடங்கிவிட்டது. அதிலும் ஈரான் எண்ணெய் கிடங்குகளில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என்ற தகவல் வந்த உடனேயே கச்சா எண்ணெய் மளமளவென உயர்ந்துவிட்டது.
இப்போது சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 80 டாலரை நெருங்கிவிட்டது. தற்போதைய சூழலில் மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் முடியாது. அது அதிகரிக்கவே செய்யும் என்பதால் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு என்பது வாய்ப்பே இல்லை என்றே கூறப்படுகிறது. அதேநேரம் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்தால் பெட்ரோல், டீசல் விலை உயரவே வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications