சிறையிலுள்ள.. பாதிரியார் ஸ்டேன் சாமிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை.. மும்பை ஹைகோர்ட் அனுமதி
மும்பை: எல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பாதிரியார் ஸ்டேன் சாமி, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை தலோஜா சிறையிலிருந்து ஹோலி ஃபேமிலி மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சையளிக்க 15 நாட்கள் சலுகை வழங்கியுள்ளது மும்பை உயர்நீதிமன்றம்.
தமிழகத்தைச் சேர்ந்த 84 வயதான இயேசு சபை பாதிரியார் ஸ்டேன் சாமி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஆதிவாசி மற்றும் தலித் மக்களுக்கு சேவை செய்துவந்தார். அவரை தேசிய புலனாய்வு அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபர் 8ம் தேதி அதிரடியாக கைது செய்தது.

இவர் நிலம், காடு மற்றும் தொழிலாளர் உரிமைகள் தொடர்பாக ஆதிவாசி சமூகங்களின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக அம்மாநிலத்தில் பணியாற்றியுள்ளார். வன நிலங்களை தொழிலதிபர்களுக்கு வழங்குவதை எதிர்த்து குரல் கொடுத்து வந்தார்.
ஆனஆல், எல்கர் பரிஷத் / பீமா கோரேகான் வழக்கு தொடர்பான விசாரணையை நடத்திவரும் என்.ஐ.ஏ, குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டியது. இந்த வழக்கில் 2018ம் ஆண்டு முதல் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1818 ஆம் ஆண்டில் பேஷ்வாக்களுக்கு எதிராக பெருமளவு தலித் சமூகத்தைச் சேர்ந்த வீரர்களைக் கொண்ட பிரிட்டிஷ் ராணுவம் வெற்றி பெற்ற பீமா கோரேகான் போரின் 200 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 2018 ஜனவரி 1ம் தேதி, லட்சக்கணக்கான தலித்துகள் புனே அருகே கூடியிருந்தனர். அப்போது, ஏற்பட்ட வன்முறையில் கூடியிருந்தவர்களின் வாகனங்கள் எரிக்கப்பட்டு, அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
2017 டிசம்பரில் புனேவில் உள்ள சனிவார் வாடாவில் எல்கர் பரிஷத் என்று அழைக்கப்பட்ட நிகழ்ச்சி நடந்தது. அதன் காரணமாக வன்முறை நடந்ததாகக் காவல்துறை குற்றம்சாட்டியது. மாவோயிச நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், அதில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஈடுபட்டதாகவும் கூறி புனே காவல்துறை சமூக செயல்பாட்டாளர்களைக் கைது செய்தது. அந்த வழக்கில்தான் ஸ்டேன் சாமியும் கைது செய்யப்பட்டார்.
மாவோயிஸ்டுகளுடன் ஸ்டேன் சாமிக்கு தொடர்பு உள்ளதாக கூறி அவரது கணினியிலிருந்து எடுக்கப்பட்டதாகக் கூறி என்.ஐ.ஏ பல சான்றுகளை காட்டி ஸ்டேன் சாமியின் கைது நடவடிக்கைக்கு காரணம் கூறியது. ஆனால் இதை போலீஸ்தான் வைத்து தன் மீது வழக்கை போட்டதாக ஸ்டேன் சாமி கூறினார்.
இந்த நிலையில்தான், ஸ்டேன் சாமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மே 21ம் தேதி, அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல நீதிமன்றம் அனுமதித்தது. ஆனால் ஸ்டேன் சாமி இதை ஏற்கவில்லை. இதையடுத்து அவரது வழக்கறிஞர் மிஹிர் தேசாய் ஸ்டேன் சாமியுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து மும்பை ஹைகோர்ட்டில் இடைக்கால ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அதில், ஹோலி ஃபேமிலி என்ற தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல அனுமதி கோரினார். இதையேற்ற ஹைகோர்ட் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி வழங்கியுள்ளது.
தலோஜா சிறையிலுள்ள ஸ்டேன் சாமி, வீடியோ கான்பரன்ஸ் மூலம், நீதிமன்ற விசாரணையில் ஆஜராகி வந்தார். ஆனால் கடந்த வாரம், ஸ்டேன் சாமிக்கு காய்ச்சல், சளி இருந்தது தெரியவந்தது. உடன் இருக்கும் 26 பேருக்கு கொரோனா பாசிட்டிவாகியுள்ள நிலையில் ஸ்டேன் சாமிக்கு, டெஸ்ட் கூட எடுக்கவில்லையாம். இதுகுறித்து தனது மனுவில் ஹைகோர்ட்டில் தெரிவித்திருந்தார் ஸ்டேன் சாமி. இந்த நிலையில்தான் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற முடிவு செய்துள்ளார் அவர்.
மருத்துவச் செலவு சாமியால் ஏற்கப்படும் என்று தேசாய் நீதிமன்றத்திற்கு உறுதியளித்துள்ளார். "மனுதாரர் வயது 84 ஆண்டுகள். சர் ஜே.ஜே. மருத்துவமனையின் மருத்துவர்கள் பரிசோதனை நடத்தியதில் சாமிக்கு சிகிச்சை தேவைப்படுகிறது என்பது உறுதியாகியுள்ளது. எனவே அவரின் வயதைக் கருத்தில் கொண்டு ஹோலி ஃபேமிலி மருத்துவமனை நிர்வாகம் தக்க சிகிச்சையை வழங்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்." இவ்வாறு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications