மருத்துவமனையில் தர்மேந்திரா! வீடியோவை லீக் செய்த ஊழியர் கைது! அஜித்துக்கும் நடந்ததே நினைவிருக்கா?
மும்பை: பாலிவுட் நடிகர் தர்மேந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது அவரை வீடியோ எடுத்து வெளியிட்டதாக மருத்துவமனை ஊழியர் ஒருவரை போலீஸார் கைது செய்தனர். இதே போல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அஜித் மருத்துவமனைக்கு வந்ததை படம் பிடித்து போட்ட மருத்துவமனை பெண் ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நடிகர் தர்மேந்திரா சுவாசப் பிரச்சினை காரணமாக மும்பை ப்ரீச்கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவின. இதற்கு காரணம் தர்மேந்திரா சுயநினைவின்றி படுத்து கிடப்பது போல் ஒரு புகைப்படமும் வீடியோவும் பரவியதே ஆகும்.

தர்மேந்திராவின் அருகில் மகன்கள் சன்னி தியோல், பாபி தியோல் மிகுந்த வேதனையுடன் நிற்பது போலவும், தர்மேந்திராவின் முதல் மனைவி பிரகாஷ் கவுர், சன்னி தியோலின் மகன்கள் கரண் தியோல், ராஜ்வீர் தியோல் ஆகியோர் துக்கத்தில் இருப்பது போலவும் வீடியோ பரவியது.
தர்மேந்திராவின் உறவினர்கள் ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறிக் கொண்டது போலும் அந்த வீடியோவில் இருந்தது. இந்த வீடியோ வைரலான நிலையில் தர்மேந்திராவின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே "தர்மேந்திரா நலமாக இருப்பதாகவும் வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என்றும் வதந்திகளை ரசிகர்கள் நம்ப வேண்டாம் என்றும்" விளக்கமளித்தனர்.
இந்த வீடியோவை மருத்துவமனை ஊழியர் ஒருவர், வெளியிட்டது தெரியவந்தது. தர்மேந்திரா சிகிச்சை பெறும் வீடியோவை தடை செய்யப்பட்ட பகுதியில் எடுத்து அதை வாட்ஸ் ஆப்பில் பகிர்ந்து சோசியல் மீடியாவில் பகிரப்பட்டது. மேலும் தர்மேந்திரா குடும்பத்தினரின் தனிப்பட்ட நேரத்தை படம் பிடித்ததுடன் வதந்தி பரவ காரணமாக இருந்ததாக ஊழியரை போலீஸார் கைது செய்தனர்.
இதே போல் ஒரு சம்பவம் அஜித் விவகாரத்திலும் நடந்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு நடிகர் அஜித்தும், அவரது மனைவி ஷாலினியும் வருகை தந்தனர். அஜித்தின் ரசிகையான மருத்துவமனை பெண் ஊழியர் பர்சானா, அஜித்தை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அஜித்துக்கு என்ன ஆச்சு என கேட்டு குழம்பி வந்தனர். மேலும் அஜித் ரசிகர்கள் அல்லாதவர்கள் அவர் குறித்து அவதூறும் பரப்பினர்.
இந்த நிலையில் அந்த ஊழியர் பர்சானா, அஜித்தை வீடியோ எடுத்ததை சிசிடிவியில் மருத்துவமனை நிர்வாகம் பார்த்து அவரது செல்போனை பறித்தனர். மேலும் அந்த பெண் ஊழியர் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார். இதையடுத்து தனக்கு வேலை வழங்க மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசுமாறு ஷாலினியிடம் அந்த பெண் பேசியிருந்தார்.
முதலில் வேலை கொடுத்த நிர்வாகம், பின்னர் அந்த ஊழியரை பணிநீக்கம் செய்துவிட்டதாம். இதையடுத்து மீண்டும் ஷாலினியிடம் பர்சானா முறையிட்டார். அப்போது ஷாலினியிடம், கொரோனா ஆட்குறைப்பால் அந்த ஊழியரை வேலையில் இருந்து தூக்கிவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் சொன்னது என அந்த பெண்ணிடம் தெரிவித்தார். இதையடுத்து வேலையில்லாமல் தவித்த பர்சானா திடீரென தற்கொலைக்கும் முயன்ற சம்பவம் அப்போது பரபரப்பை கிளப்பியது.












Click it and Unblock the Notifications