இந்தியாவை உடைக்க நினைத்தால்.. வங்கதேசத்துக்கு வார்னிங் கொடுத்த ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்!
மும்பை: ‛‛இந்தியா வளர்ந்து வருகிறது. இந்தியாவை இனி பலவீனப்படுத்த முடியாது. இந்தியாவை உடைக்க முடியாது. இந்தியாவை உடைக்க முயற்சிப்பவர்கள் சிதறடிக்கப்படுவார்கள். வங்கதேசத்தில் சுமார் 1.25 கோடி இந்துக்கள் உள்ளனர். அவர்கள் அங்கேயே தங்கி போராட முடிவு செய்தால் உலகெங்கிலும் உள்ள அனைத்து இந்துக்களும் அவர்களுக்கு உதவுவார்கள்'' என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் கடும் வார்னிங் செய்துள்ளார்.
பாஜகவின் தாய் அமைப்பாக உள்ள ஆர்எஸ்எஸ் 100 ஆண்டுகளை நிறைவு செய்து வருகிறது. இதையொட்டி ஆர்எஸ்எஸ் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் மும்பை வொர்லி நேரு மையத்தில் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவையொட்டி நடந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசினார்.

மோகன் பாகவத்
இந்த சமயத்தில் வங்கதேசத்தில் சிறுபான்மையினராக இருக்கும் இந்துக்களுக்கு எதிரான அடக்குமுறை, வன்முறையை கண்டித்தார். அதுமட்டுமின்றி வங்கதேசத்துக்கு வார்னிங் செய்தார். இதுதொடர்பாக மோகன் பாகவத் கூறியதாவது:
அனைவருக்குமான ஆர்எஸ்எஸ்
‛‛எந்த ஜாதியை சேர்ந்தவரும் ஆர்.எஸ்.எஸ் தலைவராக ஆகலாம். பட்டியல் ஜாதி அல்லது பழங்குடியினராக இருப்பது தகுதியிழப்பு அல்ல, பிராமணராக இருப்பது தகுதி அல்ல. ஆர்.எஸ்.எஸ் ஆரம்பத்தில் பிராமணர்களுடன் தொடங்கப்பட்டிருந்தாலும் நாங்கள் அனைத்து ஜாதியினருக்காகவும் பணியாற்றுகிறோம். சங்கம் யாருக்கும் எதிரானது அல்ல. அது அதிகாரத்தை விரும்பவில்லை. அதன் நோக்கம் சமூகத்தை ஒன்றிணைப்பது மட்டுமே.
வங்கதேசத்துக்கு வார்னிங்
இந்தியா வளர்ந்து வருகிறது. இந்தியாவை இனி பலவீனப்படுத்த முடியாது. இந்தியாவை இப்போது உடைக்க முடியாது. இந்தியாவை உடைக்க முயற்சிப்பவர்கள் சிதறடிக்கப்படுவார்கள். வங்கதேசத்தில் சுமார் 1.25 கோடி இந்துக்கள் உள்ளனர்.
அங்குள்ள இந்துக்கள் அங்கேயே தங்கி போராட முடிவு செய்தால் உலகெங்கிலும் உள்ள அனைத்து இந்துக்களும் அவர்களுக்கு உதவுவார்கள்'' என்று வங்கதேசத்துக்கு வார்னிங் செய்தார்.
வங்கதேசத்தில் என்ன நடக்கிறது?
வங்கதேச பிரதமராகஷேக் ஹசீனா இருந்தவரை நம் நாட்டுக்கும், அந்த நாட்டுக்கும் இடையே நல்ல நட்பு இருந்தது. ஆனால் வங்கதேசத்தில் கடந்த 2004ம் ஆண்டு ஜூலை மாதம் 5ம் தேதி மாணவர்கள் போராட்டம் வன்முறையானது. பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் திரும்பியது. இதனால் உயிருக்கு பயந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து நம் நாட்டில் தஞ்சமடைந்தார்.
வங்கதேசத்தில் தற்போது இடைக்கால ஆலோசகர் முகமது யூனுஸ் தலைமையிலான அரசு நடந்து வருகிறது. இவர் நம் நாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டுடன் உள்ளார். முகமது யூனுஸ் பொறுப்பேற்றது முதல் வங்கதேசத்தில் வன்முறை தொடர்ந்து வருகிறது.
வடகிழக்கு மாநிலங்கள் மீது குறி
அதுமட்டுமின்றி வங்கதேசம், பாகிஸ்தானுடன் சேர்ந்து செயல்பட்டு வருகிறது. வடகிழக்கு மாநிலங்களை பிரிப்பதாக மிரட்டி வருகிறது. மேலும் இந்துக்களுக்கு எதிரான அடக்குமுறைகள் அரங்கேறி வருகிறது. இந்து இளைஞர்கள் குறிவைத்து கொல்லப்பட்டு வருகின்றனர்.
நம் நாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டுடன் கடுமையாக பேசி வந்த மாணவர் அமைப்பை சேர்ந்த ஷெரீப் உஸ்மான் ஹாடி சமீபத்தில் கொல்லப்பட்டார். அதன்பிறகு இந்துக்கள் மீதான வன்முறை அதிகரித்தது. 8 க்கும் அதிகமான இந்துக்கள் கொல்லப்பட்டனர். தீவைத்து எரித்தும், அடித்தும் அவர்கள் கொல்லப்பட்டனர்.












Click it and Unblock the Notifications