மகாராஷ்டிராவில் பாஜக பக்கம் வீசும் காற்று.. படுதோல்வியை நோக்கி காங்கிரஸ்.. புதிய சர்வே முடிவுகள்
மும்பை: மகாராஷ்டிராவில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், அங்கு மெட்ரிஸ் என்ற அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது. அங்கு மொத்தம் 288 சீட்கள் இருக்கும் நிலையில், பாஜக கூட்டணியே வென்று ஆட்சியைப் பிடிக்க வாய்ப்புகள் அதிகம் என்று மெட்ரிஸ் சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர சட்டசபையைப் பொறுத்தவரை அங்கு மொத்தம் 288 சீட்கள் உள்ளன. அதில் எந்தக் கட்சி 145 இடங்களில் வெல்கிறதோ.. அந்தக் கட்சியே ஆட்சியைப் பிடிக்கும்.

இதற்கிடையே இந்த முறையும் மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணியே வென்று ஆட்சியைத் தக்க வைக்கும் என்று மெட்ரிஸ் அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
கருத்துக்கணிப்பு: கடந்த அக். 10ம் தேதி முதல் நவ.9ம் தேதி வரை சுமார் 1.10 லட்சம் பேரிடம் இந்த சர்வே நடத்தப்பட்டுள்ளது. அதில் பாஜக- ஷிண்டே சிவசேனா- அஜித் பவார் என்சிபி தலைமையிலான பாஜக கூட்டணி மொத்தமுள்ள 288 இடங்களில் 145 முதல் 165 இடங்களில் வெல்ல வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. மறுபுறம் காங்கிரஸ்- தாக்ரே சிவசேனா- சரத் பவார் என்சிபி கட்சியால் அங்கு 106 முதல் 127 இடங்களில் மட்டுமே வெல்ல வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
வாக்கு வங்கி என்று பார்க்கும் போது பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கு அதிகபட்சமாக 47% வாக்குகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபுறம் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு 41% வாக்குகள் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இதர கட்சிகளுக்கு 12% வரை வாக்குகள் போகலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
பிராந்தியம் வாரியாக: பிராந்தியம் வாரியாக பார்க்கும் போது மேற்கு மகாராஷ்டிரா (48%), விதர்பா (48%), மற்றும் தானே-கொங்கன் (52%) ஆகியவற்றில் பாஜக செல்வாக்கு அதிகமாக இருப்பதாக மேட்ரைஸ் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. மறுபுறம் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு வடக்கு மகாராஷ்டிரா மற்றும் மராத்வாடா பிராந்தியத்தில் முறையே 47 சதவீதம் மற்றும் 44 சதவீதம் வாக்குகள் கிடைக்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த கருத்துக்கணிப்புகள் உண்மையாகும்பட்சத்தில் அது எதிர்க்கட்சிகளுக்கு மிகப் பெரிய பின்னடைவாகவே இருக்கும். ஏனென்றால் இதே மகாராஷ்டிராவில் லோக்சபா தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு மொத்தம் இருக்கும் 48 சீட்களில் 31 சீட்கள் கிடைத்தன. பாஜக கூட்டணியால் 17 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்து இருந்தது. ஆனால், ஆறே மாதத்தில் அங்கு மக்கள் மனநிலை மாறிவிட்டதையே இந்த சர்வே காட்டுகிறது.
மகாராஷ்டிராவில் இந்த முறை ஒரே கட்டமாக வரும் நவ. 20ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து நவ. 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
கடந்த தேர்தல்: மகாராஷ்டிராவில் மொத்தம் 288 சீட்கள் உள்ளன. கடந்த 2019ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.. அதேநேரம் பாஜக 105 சீட்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. பாஜக கூட்டணியில் போட்டியிட்ட ஒருங்கிணைந்த சிவசேனா 56 இடங்களில் வென்று இருந்தது. அதேபோல ஒருங்கிணைந்த என்சிபி 54 சீட்களிலும், காங்கிரஸ் 44 இடங்களிலும் வென்று இருந்தன.
அப்போது தேர்தலுக்குப் பிறகு யார் முதல்வர் என்பதில் குழப்பம் ஏற்படவே சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தது. ஆனால், இந்த கூட்டணி நீடிக்கவில்லை.. சிவசேனா கட்சியில் ஷிண்டேவும், என்சிபி கட்சியில் அஜித் பவாரும் கலகம் செய்ய இரு கட்சிகளும் இரண்டாக உடைந்தது குறிப்பிடத்தக்து.












Click it and Unblock the Notifications