மழை வெள்ளத்தால் ஸ்தம்பித்த கொங்கன்...குடியிருப்புகள் முற்றிலும் மூழ்கின - போக்குவரத்து துண்டிப்பு
கடும் மழை வெள்ளம் காரணமாக கொங்கன் முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது. ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆங்காங்கு நிறுத்தப்பட்ட ரயில்களில் 6,000 பயணிகள் சிக்கித் தவிக்கின்றனர்.
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் பெய்து வரும் அதிதீவிர கனமழையால் பல மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. கொங்கனில் சில நாட்களால் விடாமல் பெய்து வரும் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ரத்னகிரி மாவட்டம் வசிஷ்டி ஆற்றில் வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டி கரைபுரண்டு ஓடுகிறது. குடியிருப்புகள் முற்றிலும் மூழ்கியுள்ளன. மக்களை மீட்கும் பணியில் கடலோர காவல்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
Recommended Video
தென்மேற்குப் பருவமழை மகாராஷ்டிரா மாநிலத்தில் தீவிரமடைந்துள்ளது. வடமேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதன் காரணமாக இந்தியாவின் மேற்கு மற்றும் மத்திய பகுதிகள் அடுத்த மூன்று நான்கு நாட்களில் தொடர்ந்து கனமழை பெய்யும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.
மும்பையில், நவி மும்பை, கொங்கன், தானே, சதாரா உள்ளிட்ட பல மாவட்டங்களில் அதி தீவிர கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ரெட் அலெர்ட் விடுத்துள்ளது. வானிலை மையம் அறிவித்தது போலவே கடந்த ஞாயிறுக்கிழமை முதலே மும்பை, கொங்கன், தானே உள்ளிட்ட பல பகுதிகளில் விடாமல் அதி கனமழை பெய்து வருகிறது.

மோசமான பாதிப்பு
மும்பையிலிருந்து 240 கி.மீ தூரத்தில் வெள்ளத்தில் மூழ்கிய சிப்லுன் பகுதியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன, மேலும் இது மாநிலத்தில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கொங்கன் ரயில் பாதையில் சிப்லுன் மற்றும் கமதே ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் பாலத்தில் அபாய கட்டத்தைத் தாண்டி வெள்ளம் ஓடுகிறது.

கடும் வெள்ளப்பெருக்கு
வசிஷ்டி நதியும் ஒரு அணையும் நிரம்பி வழிகின்றன, வெள்ள நீர் வேகமாக உயரத் தொடங்கியதால் குடியிருப்பாளர்கள் அச்சமடைந்தனர். வீடுகளையும் அடுக்குமாடி குடியிருப்புகளையும் மூழ்கடித்துக்கொண்டு வெள்ளநீர் செல்கிறது. பேருந்துகள் முற்றிலும் நீரில் மூழ்கியுள்ளன. சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த அனைத்து வாகனங்களும் வெள்ளநீரில் அடித்துச்செல்லப்பட்டன. உள்ளூர் சந்தை, பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையம் அனைத்தும் மூழ்கியுள்ளன.

போக்குவரத்து முற்றிலும் துண்டிப்பு
மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் குடியிருப்புகளுக்குள் சிக்கித் தவிக்கும் உள்ளூர்வாசிகள் இந்திய கடலோர காவல்படையினர் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர். சிப்லுன் நகரில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மும்பை-கோவா நெடுஞ்சாலையும் மூடப்பட்டுள்ளது.

6000 பேர் பாதிப்பு
கடும் வெள்ளம் காரணமாக கொங்கன் ரயில் பாதையில் ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் ரயில்கள் ஆங்காங்கு உள்ள ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல மணி நேரம் நிறுத்தப்பட்டுள்ள ரயில்களில் 6,000 பயணிகள் வரை தவித்து வருவதாகவும் அவர்களுக்கு உணவும் தண்ணீரும் கொங்கன் ரயில்வே சார்பில் அளிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கயிறு கட்டி மீட்பு
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பிராந்தியத்திலும் ஒரு பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மும்பையில் நான்கு மற்றும் தானே மற்றும் பால்கர் மாவட்டங்களில் தலா ஒரு ஒன்பது மீட்புக் குழுக்களை அனுப்பியுள்ளது. ஒரு அணி சிப்லுனுக்கு செல்லும் வழியில் உள்ளது. இரண்டு குழுவினர் கோலாப்பூருக்கு அனுப்பப்பட்டுள்ளன.

கடும் வெள்ளப்பெருக்கு
யவத்மாலில், மூன்று நாட்களாக மாவட்டத்தில் பலத்த மழை பெய்ததைத் தொடர்ந்து சஹத்ரகுண்ட் நீர்வீழ்ச்சியின் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தானே மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையினால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ரெட் அலெர்ட்
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுபகுதி வலுவடைந்து புயல் சின்னமாக மாறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பலத்த காற்றுடன் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. அடுத்த 24 மணிநேரத்தில் இது வலுப்பெறுவதால் அது எந்த திசை நோக்கி நகர்கிறது என்பதை வானிலை ஆய்வாளர்கள் கண்காணித்து வருகிறார்கள். மகாராஷ்டிராவில் பல மாவட்டங்களில் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications