மராத்தா இடஒதுக்கீடு- மகாராஷ்டிரா பாஜக கூட்டணி அரசுக்கு 10 நாள் கெடு.. அக்.22-ல் கச்சேரி வெயிட்டிங்!
மும்பை: மராத்தா ஜாதியினர் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் கீழ் இடஒதுக்கீடு பெற வகை செய்யும் குன்பி சான்றிதழ் வழங்க மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக கூட்டணி அரசுக்கு 10 நாள் இறுதி கெடு விதித்துள்ளார் மராத்தா சமூக செயற்பாட்டாளர் மனோஜ் ஜரங்கே பாட்டீல்.
மகாராஷ்டிராவின் மண்ணின் மக்கள் மராத்தா ஜாதியினர். தங்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது மராத்தா மக்களின் நீண்டகால கோரிக்கை. இதற்கான சட்டப் போராட்டங்கள் மராத்தா மக்களுக்கு எதிரானதாகவே அமைந்தன.

இதனிடையே மராத்தா மக்கள் தங்களது கல்வி, வேலைவாய்ப்பு உரிமைக்காக மீண்டும் போர்க்கொடி தூக்கினர். அண்மையில் மகாராஷ்டிராவின் ஜல்னா மாவட்டம், அன்டர்வாலியில் மராத்தா இடஒதுக்கீடு கோரி பிரம்மாண்ட போராட்டம் நடைபெற்றது. அப்போதுதான் மராத்தா இடஒதுக்கீடுக்காக மனோஜ் ஜரங்கே பாட்டீல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். மனோஜ் ஜரங்கே பாட்டீல் உண்ணாவிரதப் போராட்டம் பெரும் நெருப்பாக பற்றி எரிந்தது. இதனால் இதனை அணைக்க மகாராஷ்டிரா அரசு காவல்துறையை களமிறக்கி அடக்குமுறைகளை ஏவியது. இதனையடுத்து பெரும் வன்முறை வெடித்தது. இது மகாராஷ்டிராவையே உலுக்கியது.
இங்கிருந்துதான் மராத்தா ஜாதியினர் இடஒதுக்கீட்டு போராட்டத்தின் தலைவராக மனோஜ் ஜரங்கே பாட்டீல் உருவெடுத்தார். மராத்தா ஜாதியினரை ஒருங்கிணைக்க சூறாவளி பயணம் மேற்கொண்டார் ஜரங்கே. இதன் முடிவில் Antarwali Sarati கிராமத்தில் நேற்று மிகப் பிரம்மாண்டான பொதுக் கூட்டத்தை ஒன்று திரடினார் ஜரங்கே. இந்தக் கூட்டத்தில் சுமார் 50 லட்சம் பேர் திரண்டனர். இது ஒட்டுமொத்த மகாராஷ்டிரா அரசியலில் மிகப் பெரும் தாக்கத்தின் முதல் நிலையாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய ஜரங்கா பாட்டீல், மராத்தா ஜாதியினர் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் கீழ் இடஒதுக்கீடு பெறுவதற்கு வகை செய்யும் குன்பி சான்றிதழ் வழங்க மகாராஷ்டிரா அரசுக்கு 10 நாட்கள்தான் கெடு; இதற்குள் எங்களுக்கு உரிய சான்றிதழ் வழங்காவிட்டால் அக்டோபர் 22-ந் தேதி அடுத்த கட்ட போராட்டத்தை அறிவிப்போம் என ச்சரிக்கை விடுத்துள்ளார். இது மகாராஷ்டிரா அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications