பட்னாவிசுக்கு கட்டம் கட்டும் மோடி? மகாராஷ்டிரா முதல்வராகும் முரளிதர் மோஹோல்? யார் இவர் தெரியுமா?
மும்பை: மகாராஷ்டிராவில் முதல்வரை தேர்வு செய்வதில் குழப்பம் நீடித்து வருகிறது. முதல்வர் பதவிக்கு தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் ஏக்நாத் ஷிண்டே இடையே போட்டி உள்ள நிலையில் மத்திய அமைச்சர் முரளிதர் மோஹோலை புதிய முதல்வராக்கப்படலாம் என்ற பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் தான் முரளிதர் மோஹோல் யார்? பின்னணி என்ன? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
மகாராஷ்டிராவில் மொத்தம் 288 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க 145 இடங்களில் வெற்றி பெற வேண்டும். கடந்த 20ம் தேதி நடந்து முடிந்தது. அதன்பிறகு 23ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் பாஜக, சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

இருப்பினும் ‛மகாயுதி' எனும் பாஜக கூட்டணி மொத்தமாக 233 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதில் ஆளும் கூட்டணியில் பாஜக மட்டும் 132 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக மாறியது. மேலும் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 57 இடங்களிலும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி 41 இடங்களில் வெற்றி பெற்றது.
மறுபுறம் ‛மகா விகாஸ் அகாடி' எனும் காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 14 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 20 இடங்களிலும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 10 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதன்மூலம் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சியை பிடிப்பது உறுதியாகி உள்ளது.
தேர்தல் முடிவு வெளியாகி இன்றோடு 7 நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் புதிய அரசு பதவியேற்கவில்லை. இதற்கு முக்கிய காரணம் முதல்வர் யார்? என்பது தான். அதாவது பாஜக கூட்டணியில் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் ஏக்நாத் ஷிண்டே இடையே முதல்வர் பதவியை பெறுவதில் போட்டி உள்ளது. நேற்று முன்தினம் அமித்ஷா, ஜேபி நட்டா தலைமையில் டெல்லியில் மகாராஷ்டிரா கூட்டணி கட்சியினர் ஆலோசனை நடத்தியும் கூட முதல்வர் யார்? என்பதில் இன்னும் இழுபறி நீடித்து வருகிறது.
மகாராஷ்டிராவை பொறுத்தவரை பாஜக 132 தொகுதிகளில் வென்றுள்ளதால் முதல்வர் பதவியை தக்க வைக்க விரும்புகிறது. ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா மற்றும் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு துணை முதல்வர் பதவியும், அமைச்சரவையில் முக்கிய இலாகாக்களையும் வழங்கலாம் என்று கூறப்படுகிறது. பாஜகவை பொறுத்தவரை மீண்டும் தேவேந்திர பட்னாவிஸை முதல்வராக்க வேண்டும் என்று மகாராஷ்டிராவை சேர்ந்த அந்த கட்சி எம்எல்ஏக்கள் கூறி வருகின்றன. இதனால் தேவேந்திர பட்னாவிஸ் பெயர் தான் பாஜகவில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் தான் பாஜகவில் தேவேந்திர பட்னாவிஸ் பெயருடன் மேலும் சிலரது பெயரும் முதல்வர் பதவிக்கான ரேஸில் உள்ள முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தேவேந்திர பட்னாவிஸ், வினோத் தாவ்டே, ராதாகிருஷ்ணா, விகே பட்டில் உள்ளிட்டோரின் பெயர்களும் அடிப்பட்டு வரும் சூழலில் தான் தற்போது இன்னொருவரின் பெயர் முன்னணியில் உள்ளதாக சொல்லப்படுகிறது. அவர் யார் என்றால் முரளிதர் மோஹோல். இவருக்கு தற்போது 50 வயது ஆகிறது. மகாராஷ்டிராவில் வளரும் பாஜக தலைவராக இவர் உள்ளார்.
முரளிதர் மோஹோல் தற்போது புனே லோக்சபா தொகுதியின் பாஜக எம்பியாக இருக்கிறார். அதோடு பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் மத்திய இணை அமைச்சராக உள்ளார். கூட்டுறவு மற்றும் விமானத்துறையின் மத்திய இணை அமைச்சராக முரளிதர் மோஹோல் செயல்பட்டு வருகிறது. இவர் 1993ம் ஆண்டு முதல் அரசியலில் செயல்பட்டு வருகிறார். ஆர்எஸ்எஸ் பின்புலம் கொண்ட இவர் புனே மாநகராட்சியின் மேயராகவும் செயல்பட்ட அனுபவம் கொண்டவர்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக தேவேந்திர பட்னாவிஸ் பிராமணர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்ற நிலையில் முரளிதர் மோஹோல் மராத்தா சமுதாயத்தை சேர்ந்தவர். மகாராஷ்டிராவில் பெரும்பான்மை சமுதாயமாக மராத்தா உள்ளது. இதனால் முரளிதர் மோஹோலை முதல்வராக்கி அந்த மக்களை சமாதானப்படுத்தி வாக்கு வங்கியை தக்க வைக்க பாஜக மேலிடம் விரும்புகிறது.
அதேபோல் தேவேந்திர பட்னாவிஸை முதல்வராக்க பிரதமர் மோடியும் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அதாவது மகாராஷ்டிரா மிகவும் முக்கியமான மாநிலமாகும். இங்கு ஏற்கனவே தேவேந்திர பட்னாவிஸ் ஏற்கனவே முதல்வராக இருந்துள்ளார். இப்போது மீண்டும் அவர் முதல்வரானால் பிரதமர் மோடிக்கு நிகரான செல்வாக்கு பெற வாய்ப்புள்ளது. இதனால் பாஜகவில் மோடியின் எதிர்காலம் கேள்விக்குறியாகலாம் என்று அவர் நினைப்பதாக கூறப்படுகிறது.
இதனால் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களின் முதல்வர் தேர்வு சர்ப்ரைஸாக இருந்தபோல் மகாராஷ்டிராவிலும் முரளிதர் மோஹோலை முதல்வராக்கலாம் என்ற முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதேவேளையில் தேவேந்திர பட்னாவிசுக்கு முதல்வர் பதவிக்கு பதில் பாஜகவின் தேசிய தலைவர் பதவி கொடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. பாஜகவின் தேசிய தலைவராக ஜேபி நட்டா இருந்தார். இவரது பதவிக்காலம் முடிவுக்கு வந்தாலும் கூட அவர் ஆக்டிங் தலைவராக உள்ளார். இன்னும் புதிய தலைவர் நியமிக்கப்படாத நிலையில் அந்த பொறுப்பு தேவேந்திர பட்னாவிசுக்கு பாஜக மேலிடம் வழங்கலாம் என்று சொல்லப்படுகிறது. இதனால் மகாராஷ்டிரா அரசியலில் பெரும் பரபரப்பு தொற்றி உள்ளது.












Click it and Unblock the Notifications