மகாலட்சுமினே பேரு வைங்க..! ஓடும் ரயிலில் பிரசவம்.. உதவிய இந்து குடும்பம்! முஸ்லீம் தம்பதி நெகிழ்ச்சி
மும்பை: மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரயிலில் இஸ்லாமிய பெண் ஒருவருக்கு கடும் பிரசவ வலி ஏற்பட்ட நிலையில் இந்து குடும்பத்தினர் உதவிய போது அவருக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இதையடுத்து பிறந்த குழந்தைக்கு மகாலட்சுமி என்ற பெயர் வைத்திருக்கின்றனர் இஸ்லாமிய தம்பதிகள்.
இந்தியாவில் இருக்கும் மாநிலங்களில் மத நல்லிணக்கத்திற்கும் சகோதரத்துவத்திற்கும், சமூக நீதிக்கும் முன்னோடியாக திகழும் மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு. அந்த அளவுக்கு மாற்று சமூகத்தினரை மதிக்கும் போக்கு அதிகமாக இங்கு உள்ளது.

மகராஷ்டிரா, உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் மதத்தின் பெயரிலான மோதல் சம்பவங்களும், கொலை கூட சில சமயங்களில் நடப்பது அதிகரித்திருப்பது நடுநிலைமையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மகாலட்சுமி எக்ஸ்பிரஸ்: ஆனால் அதையும் தாண்டி சில நேரங்களில் மனிதாபிமானம் வெல்லும் சம்பவங்கள் நடந்திருக்கிறது. அப்படி ஒரு சம்பவம் தான் மும்பையில் நடந்திருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே ஓடிக் கொண்டிருந்த மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரயிலில் இஸ்லாமிய பெண் ஒருவருக்கு கடும் பிரசவ வலி ஏற்பட்ட நிலையில் இந்து குடும்பத்தினர் உதவிய போது அவருக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இதையடுத்து பிறந்த குழந்தைக்கு மகாலட்சுமி என்ற பெயர் வைத்திருக்கின்றனர் இஸ்லாமிய தம்பதிகள்.
பிரசவ வலி: கோலாப்பூரில் இருந்து மும்பை செல்லும் மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாத்திமா என்ற 31 வயதான கர்ப்பிணி பெண்ணும் அவரது கணவரான தயாபும் பயணம் மேற்கொண்டு இருக்கின்றனர் .மகாலட்சுமி கோயிலுக்கு செல்லும் அந்த ரயிலில் இருவரும் முன்பதிவு இல்லாப் பெட்டியில் பயணம் செய்திருக்கின்றனர். லோனாவாலா ரயில்வே ஸ்டேஷனை கடந்த போது பாத்திமாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
இந்து குடும்பத்தினர்: இதையடுத்து வலியால் துடித்த மனைவியை கண்டு கணவர் தயாப் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப் போனார். இதை அடுத்து அந்த பெட்டியில் பயணம் செய்த சக பயணிகள் ஓரமாகச் சென்ற நிலையில் இந்து குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் பாத்திமாவுக்கு பிரசவம் பார்த்தனர். இதை அடுத்து ஓடும் ரயிலிலேயே அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அடுத்ததாக நின்ற கர்ஜத் ரயில் நிலையத்தில் மருத்துவ ஏற்பாடுகள் தயாராக இருந்தது.
மகாலட்சுமி: ஆம்புலன்ஸில் குழந்தையையும் பாத்திமாவையும் ரயில்வே துறை அதிகாரிகள் மருத்துவமனையில் சேர்த்தனர் . அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குழந்தை மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரயிலில் பிறந்ததால், மகாலட்சுமி போலவே இருக்கிறது என சக பயணிகள் கூறியுள்ளனர். இதை அடுத்து இந்து குடும்பத்தினருக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரயிலில் பிறந்ததை குறிக்கும் வகையிலும் தனது மகளுக்கு மகாலட்சுமி என்று பெயரிட முடிவு செய்திருப்பதாக பாத்திமாவின் கணவர் தயாப் தெரிவித்தார்.
நெகிழ்ச்சி: இதையடுத்து குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் மகாலட்சுமி என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. வட மாநிலங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிரான பிரச்சனைகள் அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில் மனிதம் இன்னும் சில இடங்களில் வாழ்ந்துதான் கொண்டிருக்கிறது என்பதை நிரூபிக்கும் விதமாக இந்த சம்பவம் நடைபெற்று இருப்பதாக நெட்டிசன்கள் நெகிழ்ச்சியுடன் இந்த செய்தியை பரப்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications