இரவில் தொடர் மின்வெட்டு.. தூங்க முடியாமல் தவித்த பெண் செய்த செயல்.. இனி மின்வாரியம் மறக்காது
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் இரவில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்பட்டதால் தூங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுத இளம்பெண் அடுத்து செய்த சம்பவம் மின்வாரிய அதிகாரிகளை அலறவிட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதுபற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.
தமிழகத்தில் தற்போது மின்வெட்டு அதிகரித்துள்ளது. குறிப்பாக நேரம், காலம் தெரியாமல் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. பல இடங்களில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக சென்னையில் தொடர் மின்வெட்டு காரணமாக இரவு நேரத்தில் தூங்க முடியாமல் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை அம்பத்தூர், மடிப்பாக்கம்,மாம்பலம், முகப்பேர், பெரம்பூர், கொளத்தூர், நீலாங்கரை என பல இடங்களிலும் தொடர்ந்து மின் வெட்டு ஏற்பட்டு வருகிறது. முதல்வர் விஜய்யின் வீடு அமைந்துள்ள நீலாங்கரை, அவர் வென்ற பெரம்பூர் தொகுதிகளில் பல இடங்களிலும் மின்வெட்டு ஏற்பட்டு வருவதால் ஆங்காங்கே பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே தான் தற்போது மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் இரவு நேரத்தில் ஏற்பட்ட மின்வெட்டால் தூக்கமின்றி தவித்த பெண் செய்த சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி உள்ளது. அதாவது நவி மும்பையின் உல்வே செக்டார் 8 என்ற பகுதியில் வசித்து வருகிறார் ஒரு பெண். இவர் தினமும் வேலையை முடித்து இரவு 11 மணிக்கு வீட்டுக்கு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார். அதன்பிறகு தான் தூங்குவார். ஆனால் கடந்த ஒரு வாரமாக இரவு நேரத்தில் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரால் சரியாக தூங்க முடியவில்லை.
மின்வாரியத்துக்கு போன் செய்து புகார் அளித்தாலும் கூட சரியாக பதில் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அந்த பெண் தூக்கமின்றி தவித்து வந்தார். இதனால் மனம் நொந்த அந்த பெண் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், '' கடந்த ஒரு வாரமாக இரவு நேரங்களில் மின்சாரம் துண்டிக்கப்படுவதால், தன்னால் சரியாகத் தூங்க முடியவில்லை. இரவு 11 மணிக்கு வேலை முடிந்து வந்து காலை 6 மணிக்கு வேலைக்கு புறப்பட வேண்டும். இப்படி இருக்கும்போது மின்சாரம் இன்றி தூக்கமின்றி தவிக்கிறேன்'' என்று கண்ணீர் விட்டு அழுதார். இந்த வீடியோவை அவர் தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு மின்வாரியத்துக்கு புகாரும் கூறினார். ஆனால் நடவடிக்கை இல்லை.
மேலும் மின்வாரிய அலுவலர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று நினைத்தார். அதன்படி சம்பவத்தன்று இரவும் அவர் வீட்டுக்கு வந்த நிலையில் மின்சாரம் தடைப்பட்டது. இதையடுத்து அந்த பெண் தனது கையில் தலையணை தூக்கி கொண்டு மின்வாரிய அலுவலகத்துக்கு தூங்க சென்றார். ''என்னுடைய வீட்டில் மின்சாரம் இல்லை. இதனால் தூங்க முடியவில்லை. உங்களின் அலுவலகத்தில் தான் மின்சாரம் உள்ளது. கதவை திறங்கள் நான் தூங்க வந்துள்ளேன்'' என்றார். இதையடுத்து அவரை அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே தான் மின்வாரிய அலுவலகத்துக்கு தலையணையுடன் அந்த பெண் சென்ற வீடியோ தற்போது இணையதளங்களில் பரவி வருகிறது.
இந்த வீடியோவை பார்க்கும் பலரும் அந்த பெண்ணின் செயலுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். அடிப்படைத் தேவையான மின்சாரம் தடையின்றி கிடைக்க வேண்டும் என்றும், அதிகாரிகளின் அலட்சியம் கண்டிக்கத்தக்கது என்றும் மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications