15 நாட்களில் திருப்பம்.. அன்றே கணித்த சுப்ரியா சுலே.. சரத்பவாருக்கு அடுத்து என்சிபி புதிய தலைவர்?
மும்பை: தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சரத் பவார் அறிவித்துவிட்டார். இதனைத் தொடர்ந்து என்சிபி கட்சியின் புதிய தலைவர் யார் என்கிற விவாதம் எழுந்துள்ளது.
நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவர்களில் ஒருவர் சரத்பவார். இன்றைய மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிரான அரசியல் வியூகங்களை முன்னெடுப்பதில் முதன்மையானவர் சரத்பவார். அதனால்தான் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைப்பு என்ற கோஷம் எப்போதும் சரத்பவாரை முன்வைத்தே நகர்த்தப்படுகிறது.

ஆனால் இப்போது தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்துவிட்டார் சரத்பவார். இந்த திடீர் அறிவிப்பு அவரது தீவிர விசுவாசிகளை ரொம்பவே கதிகலங்க வைத்துவிட்டது. சரத்பவாரின் இந்த அறிவிப்பை ஏற்க முடியாதவர்களாக கண்ணீரும் கம்பலையுமாக அவரது தீவிர ஆதரவாளர்கள் கதறிக் கொண்டிருக்கின்றனர்.
அதேநேரத்தில் சரத் பவாரின் இந்த முடிவை ஏற்றுத்தான் ஆக வேண்டும்; அவர் தமது முடிவி இருந்து பின்வாங்க மாட்டார் என ஏற்க முடியாத ஒரு நியாயத்தை சொல்லி இருப்பவர் அஜித்பவார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்துக்கு அழிவுரை எழுதப்போகிற சக்தியாகவே சரத்பவாரின் ஆதரவாளர்களால் அஜித்பவார் பார்க்கப்படுகிறார். இத்தனைக்கும் சரத்பவாரின் அண்ணன் மகன்தான் இந்த அஜித் பவார்.
அஜித் பவார் மீது எப்போதும் சரத்பவாருக்கு நம்பிக்கை இருந்தது இல்லை என்பதை 2009-ம் ஆண்டு மகள் சுப்ரியா சுலேவை களத்துக்கு கொண்டு வந்ததன் மூலம் உறுதி செய்தார் சரத் பவார். அஜித் பவாரும் தாம் எப்போதும் விசுவாசியும் இல்லை; முதுகில் குத்தக் கூடிய துரோகிதான் என்பதை 2019-ம் ஆண்டு தேர்தல் முடிந்த பின்னர் அரங்கேற்றிய நாடகங்களின் மூலம் அம்பலப்படுத்திக் கொண்டார்.
இப்போது என்சிபி கட்சியின் எம்.எல்.ஏக்கள் பலருடன் பாஜகவுக்கு ஓடிப் போக அஜித் பவார் திட்டமிட்டுள்ளார். இதனைத் தடுக்கத்தான் சரத்பவார் வேறுவழியே இல்லாமல் தலைவர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் என கூறப்படுகிறது. இதனை உறுதி செய்யும் வகையில் சரத் பவாரின் ராஜினாமாவை நியாயப்படுத்தி கட்சியை தம் வசமாக்க முயற்சித்து வருகிறார் அஜித் பவார். ஆனால் சரத்பவாரின் தீவிர விசுவாசிகள், நம்பிக்கை துரோகியாகப் பார்க்கும் அஜித் பவாரை அவ்வளவு எளிதாக ஏற்பார்களா? என்பது கேள்விக்குறி.
ஏனெனில் சரத்பவாரின் மகளும் லோக்சபா எம்பியுமா சுப்ரியா சுலே களத்தில்தான் இருக்கிறார்.. சுப்ரியா சுலேவின் தலைமையை ஏற்கத் தயாராகவே அவரது ஆதரவாளர்கள் இருக்கிறார்கள். அஜித் பவாரை நம்பி நட்டாற்றில் மூழ்கி சாவதைவிட தலைவரின் மகள் பின்னால் அணிவகுப்பது சரியானதாக இருக்கும் என்கின்றனர் சரத் பவார் ஆதரவாளர்கள்.
மகாராஷ்டிரா அரசியலில் இன்னும் 15 நாட்களில் திருப்பங்கள் நிகழும் என கூறியிருந்தார் சுப்ரியா சுலே. அஜித்பவார் நடவடிக்கைகள் பற்றி நேரடியாக விமர்சிக்காத சுப்ரியா சுலே, அனைத்தையும் அவரிடமே கேளுங்கள் என கூறியிருந்தார். இப்போது சுப்ரியா சுலே கணித்தபடியே மகாராஷ்டிரா அரசியலில் திருப்பங்கள் அரங்கேறிவிட்டது; என்சிபியின் தலைமை அஜித் பவார் வசமா? சுப்ரியா சுலே வசமா? என்பதற்கான விடை வரும் நாட்களில் தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications